சிறப்புச் செய்தி

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு அவசியமில்லை - கணபதிராவ்

18/09/2021 08:13 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- வெளிநாடுகளில் மலேசிய தாய்மார்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு இந்நாட்டு குடியுரிமையை வழங்கலாம் என்று அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

இந்த தீர்ப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், நாட்டில் இரட்டை குடியுரிமைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால்,  அதற்கு எதிராக மலேசிய அரசாங்கம் மேல் முறையீடு செய்யவிருக்கிறது.  

இதில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்தது என்றும் மேல் முறையீட்டு முடிவை அரசாங்கம் மறு-பரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இந்த குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான விவகாரத்தில் இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்காத மலேசிய அரசாங்கத்தின் கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் நேற்று முன்தினம் மக்களவையில் கூறியிருந்தார். 

கூட்டரசு அரசிலயமைப்பு சட்டம், பிரிவு 15 உட்பிரிவு 2-டின் கீழ், ஒரு மலேசிய பிரஜையான தாயிக்கும், மலேசியர் அல்லாத தந்தைக்கும் வெளிநாட்டில் பிறக்கும் 21-வயதுக்கும் கீழான தனிநபர்களுக்கான மலேசிய குடியுரிமை நிராகரிக்கப்படுவதன் காரணம் குறித்தும் அவர் விளக்கம் அளித்திருந்தார். 

இது தொடர்பில், கருத்துரைத்திருக்கும் கணபதிராவ், இந்நாட்டு பிரஜைகளான ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உரிமையை வழங்கி இருக்கும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு நியாயமானது என்றும் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகின்றார். 

''ஆண்-பெண் இந்நாட்டில் சரிசமமாக கவனிக்கப்படுகிறனர். ஆனால் இது போன்ற குடியுரிமை விவகாரங்களில், ஒரு சாராருக்கு மட்டுமே உரிமை உண்டு எனும் போது அது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகமான பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிறப்பு பத்திரங்கள் எடுப்பதிலும் ஆவணங்களை காண்பிப்பதிலும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு இதற்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது'', என்று கணபதிராவ் கூறினார்.   

திருமணப்பதிவு, பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ், குடிநுழைவு விதிமுறை என்று மாநில அரசின் கீழ், பல்வேறு பிரச்சனைகளை தமது தரப்பு கவனித்து வருகின்ற நிலையில் உயர் நீதிமன்றத்தின் இம்முடிவு, இதுபோன்ற விவகாரங்களுக்கு விடியலாக இருக்கும்  என்றும் கணபதிராவ் நம்பிக்கைத் தெரிவித்தார். 

அரசாங்க ரீதியில், தந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகையை தாய்மார்களுக்கும் வழங்கி, அதனை சமன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை  கடிதம் வாயிலாக  பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சுக்கும் கணபதிராவ் முன்வைத்திருக்கின்றார். 

வெளிநாடுகளில் பிறந்த தங்களின் பிள்ளைகளுக்கு மலேசிய குடியுரிமையை வழங்கும் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, அறிவித்தது. 

ஆனால், இரட்டை குடியுரிமைக்கு நாட்டில் இடமில்லை என்பதால் இதில் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சு கூறியிருந்தது. 

 

-- பெர்னாமா