பொது

பள்ளிகள் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு எம்.ஏ.பி. வலியுறுத்து

09/09/2021 02:34 PM

கோலாலம்பூர், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- பள்ளிகள் அக்டோபர் 3-இல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இதற்கு மக்கள் அனைத்து வகையிலும் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கொவிட்-19 நோய்ச் சம்பவங்களிம் எண்ணிக்கை இன்னும் ஏற்றத்தாழ்வாக இருக்கும் நிலையில் பள்ளிகளில் இந்நோய்ப் பரவது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி, எம்.ஏ.பி. உதவித் தலைவர் முனைவர் குமரன் அடைக்கலம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், இன்னமும் நோய்ப் பரவல் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. நேற்று, புதன்கிழமை 19,733 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதோடு 361 பேர் இந்நோய்க்கு பலியாகினர். இந்நிலையில் பெரும்பாலும் 17 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வயதினர், அதுவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் பள்ளிகளைத் திறப்பது பாதுகாப்பானதா என்னும் கேள்வியை முனைவர் குமரன் முன் வைத்தார்.

குறிப்பாக, ஆசிரியர் தரப்பிலும் சுமார் 2,500 பேருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்சி ஜிடின் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

12 முதல் 17 வயது வரையிலுள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த வாரம் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சர் அறிவித்திருந்தாலும், நாடு முழுவதும் உள்ள 23 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் தேவைப்படும். இச்சூழ்நிலையில், பள்ளிகளைத் திறந்தால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன் பள்ளிகளின் மூலம் பெருந்தொற்று பரவிய நிலையில், இப்பொழுது பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை அறிந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர். அண்மையில் எம்.ஏ.பி. சார்பில் உலு சிலாங்கூரில் உணவுப் பொருட்களை வழங்கியபோது தன்னைச் சந்தித்த பெற்றோரில் பலரும் பாதுகாப்பற்ற தற்போதைய நிலையில், அதுவும் பெருந்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தற்போதைய சூழலில் பள்ளிகளை பள்ளிகளுக்கு அனுப்புவது குறித்து அச்சம் தெரிவித்ததாக முனைவர் குமரன் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, கல்வி அமைச்சர் இவற்றை பரிசீலித்து, பள்ளிகள் திறப்பதைக் காட்டிலும் செயல்பாட்டு தர விதிமுறையை இன்னும் வலுப்படுத்தி பெற்றோர் தரப்பின் ஐயத்தைப் போக்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, பள்ளிகளின் மூலம் புதிய பரவல் ஏற்படாமல் இருக்க முதலில் மாணவர்கள், ஆசிரியர் அனைவரும் தடுப்பூசி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

அடுத்த சில மாதங்களில் பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும் என்பதால் பள்ளிகளை அடுத்த ஆண்டில் தொடங்குவது எல்லா வகையிலும் பாதுகாப்பாக அமையும் என்று தெரிவித்துள்ள முனைவர் குமரன், தற்போது பள்ளிகளைத் திறப்பது இன்னொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மீண்டும் கல்வித் துறையையும் மத்தியக் கூட்டரசையும் எம்ஏபி சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)