பொது

ஆகஸ்ட் தொடக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டம் கலப்பு முறையில் நடத்தப்படலாம்

25/06/2021 06:09 PM

கோலாலம்பூர், 25 ஜூன் (பெர்னாமா) -- நேரடி மற்றும் இயங்கலை வாயிலான கலப்பு முறையிலான நாடாளுமன்றக் கூட்டம் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில தேவைகளைப் பொறுத்தே அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் ரயிஸ் யாத்திமும் மக்களவைத் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹருனும் இன்று இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

அவை செயற்குழு மற்றும் கூட்ட விதிமுறைகளுக்கான செயற்குழு நிலையில் கலப்பு முறையிலான நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், அதன் அனைத்து சட்ட அம்சங்களும் ஜூலை இறுதிக்குள் தீர்க்கப்பட்டு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடத்தப்படும்.

கூட்ட விதிமுறைகளில் சில திருத்தங்கள், மெய்நிகர் மாநாட்டின் வரையறை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட கலப்பு முறையிலான நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுவது தொடர்பில், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்களின் விவரங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பதை உறுதி செய்ய அந்த சிறப்பு அமர்வு முக்கியமானது.

இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பொருட்களை வாங்குவதற்கும், கலப்பு முறையிலான கூட்ட முறையை தற்போதுள்ள செயல்முறைபுடன் ஒருங்கிணைப்பதற்கும், முன்னோட்டச் சோதனை, பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு நாடாளுமன்றத் தரப்பினருக்கு சிறிது கால அவகாசம் தேவை.

மேலவை மற்றும் மக்களவை கூட்டங்களும் கலப்பு முறையில் நடத்துவதற்கு அண்மையில் அமைக்கப்பட்ட இரண்டு அவைகளின் தலைவர்கள் தலைமையிலான கலப்பு முறை நாடாளுமன்றக் கூட்ட சிறப்புக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]