சிறப்புச் செய்தி

பி.கே.பி. நீடித்தால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பேரிழப்பு

17/06/2021 09:07 PM

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை, நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியது முதல் இந்திய வர்த்தகர்கள் வருமானத்தை இழந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, நாட்டில் அமல்படுத்தப்பட்ட முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் வர்த்தகர்கள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையும், ஏற்பட்டிருக்கிறது.

இவர்களின் சுமையைக் குறைக்க, அரசாங்கம் பல்வேறு உதவி மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்த போதிலும், அது போதுமானதாக இல்லாத சூழ்நிலையில், இந்நிலை நீடித்தால், வர்த்தகர்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும் என்று, KLSICCI எனப்படும், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

''ஜூலை முதலாம் தேதி, பி.கே.பி. நிறைவடைந்து பொருளாதாரத் துறைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால் எங்களின் உறுப்பினர்கள் அல்லது பொதுவாக அனைத்து சிறு மற்றும் நடுத்த வியாபாரிகளும் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்நோக்கக்கூடும். பெரும்பாலும் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும். உதாரணமாக நடுத்தர வியாபாரிகள் மூன்று மாதத்திற்கான சேமிப்பையே கொண்டிருப்பார்கள். எனவே, இச்சூழ்நிலை தொடர்ந்தால், இந்த துறையில் நீடித்திருக்க முடியாது,'' என்று அவர் கூறினார். 

தற்போது அரசாங்கம் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே வங்கி கடன் ஒத்தி வைப்பை வழங்க இணக்கம் தெரிவித்திருக்கிறது.

அதில், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் உட்படுத்தப்படாத வேளையில், அவர்களுக்கு வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை டத்தோ ராமநாதன் சுட்டிக் காட்டினார்.

எனினும், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாத கால அவகாசம் எடுக்கும்.

அதற்குள், தங்களின் வியாபாரத்தை மூடுவதற்கான சூழ்நிலை ஏற்படும் என்பதால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும் இந்த வங்கி கடன் ஒத்தி வைப்பை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

''அதனால், முதலாவது பி.கே.பி.-இல் வழங்கப்பட்டதுபோல எங்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும், ஆறு மாதத்திற்கு தானியங்கி முறையிலான வங்கி கடன் ஒத்தி வைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் எங்களால் இத்துறையில் நீடித்திருக்க முடியும்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, தற்போது ஒரு மாதத்திற்கு 600 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் ஊதிய ஊக்குவிப்புத் தொகையை, மேலும் ஐந்து மாதத்திற்கு நீட்டித்து அதன் தொகையையும் 1,200 ரிங்கிட்டாக அதிகரிக்குமாறு அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதனிடையே,  தற்போதிருக்கும் சூழ்நிலையில் வர்த்தகர்கள் கடன் பெறுவதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஜோகூர் இந்திய வர்த்தகர் மற்றும் தொழில்துறை சம்மேளன செயலாளர் டத்தோ கே. கிருஷ்ணன் கூறுகின்றார்.

''இவர்கள் வங்கியில் கடன் பெற்று முழுமையாக செயல்படத் தொடங்குவதற்கு முன்பே,  உடனடியாக அல்லது மூன்று மாதத்தில் அக்கடனைச் செலுத்துமாறூ கூறினால், அவர்களால் அது முடியுமா என்பது கேள்விக்குறி. இவ்வாறு இருக்கையில், எப்படி கடன் பெறுவது,'' என்று அவர் கேள்வி எழுப்பினார்

இதனால், தற்போது சொந்த கடையை வைத்திருப்பவர்கள் வியாபாரத்தை தொடரலாமா என்று சிந்தித்து வரும் வேளையில், கடையை வாடகைக்கு பெற்றிருப்பவர்கள் அதை திருப்பி கொடுக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், வர்த்தகர்களுக்கு தேவையான சில கோரிக்கைகளையும் அவர் முன் வைத்தார்.

''வங்கி மூலமாக கடன் பெறும்போது, அதற்கான ஆவணங்களையும், ஆறு மாத வரவு செலவு கணக்குக்கான ஆதாரத்தையும் கேட்கின்றனர். இந்த ஆறு மாத காலத்தில் தொழில் முடங்கி விட்ட நிலையில் எந்தக் கணக்கை காட்டுவது. எனவே, இக்காலகட்டத்தில் அரசாங்கம் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் பி.கே.பி.-க்கு முன்பிருந்த வரவு செலவு கணக்கின் அடிப்படையில் கடன் வழங்கினால் உதவியாக இருக்கும்,'' என்று அவர் குறிப்பிட்டா.

அதைத் தவிர்த்து, வர்த்தகர்கள் விரைவில் தங்களின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)