பொது

நாளை தொடங்கி போக்குவரத்து சம்மன்களுக்கு கழிவு - பி.டி.ஆர்.எம்

17/06/2021 08:15 PM

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- நாளை ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 18-ஆம் தேதி வரையில், போக்குவரத்து சம்மன்களுக்கு, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், 50 விழுக்காடு கழிவை வழங்கவிருக்கிறது.

நீதிமன்ற விசாரணையில் இருக்கும் சம்மன் வழக்குகள், இவ்வாண்டில் செய்யப்பட்ட முதன்மையான போக்குவரத்து குற்றங்கள், கனரக வாகனங்கள், மற்றும் எக்சொஸ் எனப்படும், உபரிப் பாகத்தை மாற்றியமைத்த குற்றங்களுக்கான சம்மன்கள் ஆகியவற்றிற்கு, அந்த கழிவு சலுகை வழங்கப்படாது என்று,
புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர், டத்தோ அஸிஸ்மான் அலியாஸ் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சம்மன்களை, MyBayarSaman செயலி மற்றும் அதன் அகப்பக்கத்தின் வாயிலாக செலுத்தலாம் என்றும் டத்தோ அஸிஸ்மான் தெரிவித்தார்.

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் காரணத்தால் போலீஸ் தலைமையகங்களில் செயல்படும் சம்மன்களை செலுத்தும் முகப்புகள் மூடப்பட்டிருக்கும்.

கழிவு வழங்கப்பட்ட சம்மன்களை ரொக்கமில்லா முறையில் செலுத்தினால் இந்தக் காலக்கட்டத்தில் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை பயனீட்டாளராக பதிவுசெய்து பின்னர் பயன்பாட்டின் மூலம் பணம் செலுத்துவதற்கு இலகுவாக, PDRM அறிமுகப்படுத்தியிருக்கும் MyBayarSaman செயலியும் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அஸிஸ்மான் தெரிவித்தார்.

விவேக கைத்தொலைப்பேசியை பயன்படுத்துவோர் Google Play Store, Apple Apps Store மற்றும் Huawei Gallery-யில் MyBayarSaman செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

-- பெர்னாமா