பொது

சமையல் எண்ணெய் பாக்கெட்டின் கையிருப்பு போதுமானதாக இருக்கும்

17/06/2021 07:53 PM

கோலாலம்பூர், 17 ஜுன் (பெர்னாமா) -- பொதுமக்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்கான உதவித் தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டின் கையிருப்பு, எப்போதும் போதுமானதாக இருக்கும் என்று, அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

மூன்று மற்றும் ஐந்து கிலோகிராம் எடையிலான பாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அரசாங்கம் அந்த உத்தரவாதத்தை வழங்கியிருப்பதாக கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தெரிவித்திருக்கிறார்.

அண்மையக் காலமாக, சமையல் எண்ணெய்யின் விலை அதிகரித்து வருவது பயனீட்டாளர்கள், குறிப்பாக உணவு வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அச்சூழலை அரசாங்கம் நன்கு உணர்ந்திருப்பதாகவும், இக்காலக் கட்டத்தில், பயனீட்டாளர்கள் குறைந்த விலையில் 2 ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் பாக்கெட்டை வாங்கும்படியும் வலியுறுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, பாக்கெட்டில் விற்கப்படும் எண்ணெய் பாட்டில் எண்ணெயைப் போன்ற தரத்தைக் கொண்டிருந்தாலும், குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெப்போங்கில், வியாழக்கிழமை AEON பேரங்காடியில், செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்.ஓ.பி. பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு, டாக்டர் சந்தாரா குமார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)