சிறப்புச் செய்தி

கேமரன்மலை பி.கே.பி.டி; வருமானமின்றி வாடும் இந்திய விவசாயிகள்

16/06/2021 08:36 PM

கேமரன் மலை, 16 ஜூன்  (பெர்னாமா) -- விவசாய பூமியான கேமரன் மலையில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி.டி தொடர்ந்து அமலில் உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக காய்கறி மற்றும் பூ விவசாயிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், இன்றைய அரசாங்கத்தின் அறிவிப்பு ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்களின் விவசாயம் மற்றும் தொழில் தடை இன்றி நடைபெற அரசாங்கத்தின் உதவிகள் தொடர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பி.கே.பி-யின் போது, பூக்களை விதைத்து, மலர் மணங்களை வீசிய, கேமரன் மலை பூந்தோட்டக்காரர்கள் வாடிய தங்களின் பயிர்களின் நிலைமையைக் காண முடியாமல், தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர், தேசிய பாதுகாப்பு மன்றம், எ.கே.என் கூட்டத்தில், எஸ்.ஓ.பி-யை பின்பற்றி பூக்கடைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியது மகிழ்ச்சி என்றாலும் அதில், தாங்கள் முழுமையாக நிறைவு காணவில்லை என்று கேமரன் மலை இந்திய விவசாயிகள் சங்கச் செயலாளர் பிரவின் குமார் மோகன் தெரிவித்தார்.

'' பிகேபிடி அமலுக்கு வந்ததால், எங்களது விவசாய நடவடிக்கைகள் தடைபட்டு, வருமான இல்லாமல் போனது. அரசாங்கம் மீண்டும் எங்களின் நிலமையைக் கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்க்க வேண்டும்'', என்று பிரவின் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பூக்களையும் காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யமுடியாமல் அங்குள்ள விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக கேமரன் மலை இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் மதன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

''அதோடு, வீட்டிலேயே இருங்கள் எனும் நிலை, விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களுக்கு சாதகமாக இல்லை அவ்வாறு இருந்தால், 14 நாட்களில் பயிர்கள் அழிந்து அது மேலும் லட்ச கணக்கில் பேரிழப்பை ஏற்படுத்தும்'', என்று அவர் கவலை தெரிவித்தார்.

எனவே, வாழ்வாதார இழப்பை எதிர்நோக்கும் வியாபாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உரிய உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

-- பெர்னாமா