பொது

யூ.பி.யூ விண்ணப்பங்களைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க அரசாங்கத்திடம் கியூமிக் பரிந்துரை

12/06/2021 08:29 PM

கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- எஸ்.பி.எம் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்தக்கட்டமாக தங்களின் உயர்க்கல்வியைத் தொடர்வதற்காக கல்விக் கழகங்களுக்கு செய்த விண்ணப்பத்தில், மாற்றங்கள் அல்லது விபரங்களை சரிப்பார்ப்பதில் மாணவர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

யூ.பி.யூ விண்ணப்பங்களைப் புதுப்பிப்பதற்காக ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 21-ஆம் தேதி வரை அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது..

இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் IPTA MY 1st CHOICE எனும் வழிக்காட்டி திட்டத்தை மேற்கொண்டு வரும் கியூமிக் எனப்படும் மலாயாப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் நடவடிக்கை குழு இந்த தேதியை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

யூ.பி.யூ விண்ணப்பங்களைப் புதுப்பிப்பதற்காக ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் மற்றும் கல்வி அமைச்சிடம் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக கியூமிக்கின் ஒருங்கிணைப்பாளர் சிவமணி ராஜகோபால் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அதேவேளையில், ''யூ.பி.யூ மூலம் தங்களுக்கான பொதுப் பல்கலைக்கழகங்களை இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு அதனை விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும்,'' என்ற கோரிக்கையும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, ''எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறுத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தையும் வரும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்,'' என்று சிவமணி மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 பெருந்தொற்றினால், இணையம் வாயிலாக விண்ணப்பங்களை செய்வதால், மாணவர்கள் பலர் சில சிக்கல்களை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் கியூமிக் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் சிவமணி விவரித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]