பொது

சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் ஏற்கும் - டத்தோ ஶ்ரீ சஃப்ரூல்

12/06/2021 04:46 PM

கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டின் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான 800 கோடி ரிங்கிட் மதிப்பிலான உதவித் தொகையை அரசாங்கம் ஏற்கும்.

முன்னதாக ஒதுக்கப்பட்ட உதவித் தொகையைக் காட்டிலும் இது 422 கோடி ரிங்கிட் அதிகமாகும்.

மக்களின் நல்வாழ்வு மற்றும் வணிகத்தின் சுமூகத்தன்மை குறிப்பாக சிறு வணிகர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் விதமாக இந்த பெரிய அளவிலான உதவித் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய உலகளாவிய சந்தை விலையில் ஏற்பட்டிருக்கும் உயர்வினாம, இவ்வாண்டு அதிக தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாக, சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெங்கு சஃப்ரூல் கூறியிருக்கிறார்.

இவ்வாண்டின் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை ஏற்பதற்காக அரசாங்கம் 378 கோடி ரிங்கிட்டை முன்னதாக ஒதுக்கியிருந்தது.

எனினும், தற்போதைய உலகளாவிய சந்தை விலை ஏற்றத்தின் காரணமாக, இத்தொகையை 800 கோடி ரிங்கிட்டாக அரசாங்கம் அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையாக, கடந்த 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் முறையே 216 கோடி ரிங்கிட் மற்றும் 632 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]