பொது

பூமிபுத்ரா அந்தஸ்து விவகாரம் ; பொறியியல் நிறுவன துணைத் தலைவர் மீது குற்றச்சாட்டு

11/06/2021 08:30 PM

கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்,  முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றை ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கத்தில், பூமிபுத்ரா அந்தஸ்து கொண்ட தகுதி வாய்ந்தது தமது நிறுவனம் என்று பட்டியலிட்ட குற்றத்திற்காக, பொறியியல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

நீதிபதி இஸ்ராலிசாம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, AKER ENGINEERING MALAYSIA நிறுவனத்தின் தலைவருமான, 50 வயதான் அஹமாட் ஹத்தா கமரூசாமான் மறுத்து விசாரணைக் கோரியிருக்கிறார்.

AKER SOLUTIONS குழும நிறுவனத்தின் முகவரான அஹமாட் ஹத்தா  சம்பந்தப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தை மோசடி செய்யும் நோக்கத்துடன் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

AKER ENGINEERING MALAYSIA நிறுவனம் பூமிபுத்ரா அந்தஸ்தைக் கொண்டிருக்காத நிறுவனம் என்று தெரிந்தும்கூட, அதனை பூமிபுத்ரா அந்தஸ்து மற்றும் தகுதி கொண்ட நிறுவனமாகப் பட்டியலிடும் முயற்சியை அஹமாட் ஹத்தா மேற்கொண்டிருந்தார். 

அதுமட்டுமின்றி, AKER SOLUTIONS குழும நிறுவனமே அதன் உண்மையான பயனாளியாக உள்ள நிலையில், அந்நிறுவன பங்குகளின் நிஜ உரிமையாளரையும் அவர் மறைத்திருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கோலாலம்பூரில் அஹமாட் ஹத்தா இக்குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 417-இன் கீழ் அவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.   

-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]