பொது

செராஸ்சில் ஒரு கோடி ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

11/06/2021 08:12 PM

கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா) -- செராசில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் போதைப் பொருளைத் தயாரித்து விநியோகிக்கும் 21 வயதான நபர் உட்பட, கணவன் மனைவி தம்பதியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டவர்களான அந்த மூன்று சந்தேக நபர்களுடன், ஒரு கோடி ரிங்கிட் மதிப்பிலான பல்வகை போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ அஸ்இ அபு காசிம் தெரிவித்திருக்கிறார்.

போதைப் பொருள் தொடர்பான குற்றப் பதிவை கொண்டிருக்கும் அம்மூவரையும் கைது செய்தப் பின்னர், கோலாலம்பூர், செராஸ் மற்றும் சிலாங்கூர் காஜாங்கில் போதைப் பொருட்ளைப் பதுக்கி வைக்கும் இடமாக நம்பப்படும் மூன்று வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ அஸ்மி கூறினார்.

''சோதனை மேற்கொள்ளப்பட்ட நான்கு வீடுகளிலிருந்து நான்கு வகை போதைப் பொருட்களை போலீஸ் கைப்பற்றியது. தயாரிக்கப்படாத ஹெரோயின் 98 கிலோகிராம், ஹெரோயின் இரண்டு கிலோகிராம், கெத்தாமின் 9.8 கிலோகிராம் மற்றும் எராமின் 16 கிலோகிராம். இந்த அனைத்து வகை போதைப் பொருட்களும் சுமார் 93 இலட்சம் ரிங்கிட் மதிப்புடையதாகும்,'' என்றார் அவர்.

கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் அனைவரும் தீவிரமாகப் போதைப் பொருட்களைத் தயாரித்து வந்ததாகவும், அவை கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிக்கப்படவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவை விநியோகிக்கப்பட்டிருந்தால், 170,000 போதைப் பித்தர்களைச் சென்றடைந்திருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வழங்கினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-யின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]