பொது

நோன்புப் பெருநாள் பாதுகாப்புடன் மிதமான அளவில் கொண்டாட வேண்டும் - இமான் வலியுறுத்து

13/05/2021 08:06 PM

கோலாலம்பூர், 13 மே (பெர்னாமா) -- ஆடம்பரமின்றி மிதமான வாழ்க்கையை வாழ்வதற்கு அடையாளமாக, இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு கடைப்பிடித்து ஷவால் முதல் நாளில், நோன்பு பெருநாளை வரவேற்கின்றனர்.

ஆண்டுதோறும், விருந்துபசரிப்பு, நிகழ்ச்சிகள், திறந்த இல்ல உபசரிப்பு என்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் இப்பெருநாள், கொவிட்-19 நோய் பரவல் காரணமாக, இவ்வாண்டும் பாதுகாப்புடன் மிதமான அளவிலேயே கொண்டாடப் படுகிறது.

இந்நிலையில், மக்கள் நலன் கருதி அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை எஸ்.ஓ.பி-யை முறையாக பின்பற்றி, இந்த நோன்பு பெருநாளை புதிய இயல்பில் கொண்டாடுமாறு, தேசிய இந்திய முஸ்லிம் பெரிக்காத்தான் கட்சி, இமான் தலைவர் முஹமட் மொசீன் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நாட்டில், கொவிட்-19 சம்பவங்களும், மரணங்களும் தொடந்து அதிகரித்து வருவதால், அப்பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில், மக்கள் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாததுடன், கோலாகல கொண்டாட்டம் இன்றி இருப்பது வருத்தமளித்தாலும், மக்கள் அதனை நாட்டின் சுபிட்சத்திற்காக ஆற்றும் கடமையாகக் கருத வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

''நமக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்கும் போக முடியவில்லை. இப்போழுதுள்ள சூழ்நிலையில் அதிகமான கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகுகின்றன. அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வீட்டிலேயே இருப்பதற்கு முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே சம்பவங்களை குறைக்க முடியும்,'' என்று முஹமாட் மொசீன் கூறினார்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தொடர்புச் சாதனங்கள் மற்றும் காணொளி அழைப்பின்வழி தொடர்புக் கொண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிலையில், இக்காலக்கட்டத்திலும், தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்புக் கிடைத்தவர்கள் அதனை முறையாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து தொழுகைச் செய்வது, உண்டு மகிழ்வது, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டிலேயே சந்தோஷமாக இந்நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, முஸ்லீம் மக்களை ஒரு குடையின் கீழ் இணைப்பதற்காக தொடங்கப்பட்டிருக்கும், இமான் கட்சி, இந்த ரமலான் மாதத்தில், சுமார் 6,000 பேருக்கு உதவிகளை வழங்கியிருப்பதாக,  மொசீன் தெரிவித்தார்.

-- பெர்னாமா