உலகம்

இந்தோனேசியாவில் மிதமான அளவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

13/05/2021 05:41 PM

ஜகார்த்தா, 13 மே (பெர்னாமா)-- உலகில் மித அதிகமான இஸ்லாமியர்களைக் கொண்டிருக்கும் நாடான இந்தோனேசியாவில் கொவிட்-19 சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் நோன்புப் பெருநாள், இன்று மிகவும் மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.

சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்துவதற்கும் தடை விதிப்பதாக முன்னதாக அறிவித்திருந்த இந்தோனேசிய அரசாங்கம், கொவிட்-19 நோய்த் தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் மட்டுமே நோன்புப் பெருநாள் தொழுகைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. 

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தமது குடும்பத்தினருடன் இஸ்தானா பாகோரில் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டதாக அதிபர் செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, இந்தோனேசியாவிற்கான மலேசிய தூதரகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கடுமையான சுகாதார நெறிமுறைகளின் பயன்பாட்டுடன் தங்களின் தொழுகையை மேற்கொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றினால்  கடந்த ஆண்டைப்போல இவ்வாண்டு மலேசிய தூதரக திறந்த இல்ல உபசரிப்பை நடத்தவில்லை என்று இந்தோனேசியாவிற்கான மலேசியத் தூதர் அட்லான் முகமட் ஷாஃபிக் கூறினார்.

அங்கு பணிபுரியும் தூதரகப் பணியாளர்கள் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி முதல் சைனோவெக் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வேளையில், மே ஆறாம் தேதி இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா