பொது

நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர் மாமன்னர் குடும்பத்தினர்

13/05/2021 04:45 PM

இஸ்தானா நெகாரா, 13 மே (பெர்னாமா)-- மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் ராஜா பெர்மாய்சூரி அகோங் துங்கு ஹாஜா அஸிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியா இன்று காலை இஸ்தானா நெகாராவில் தங்களின் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர்.

மாமன்னர் தம்பதியர் தங்களின் புதல்வர் தெங்கு பங்ளிமா ராஜா தெங்கு அமிர் நாசிர் இப்ராஹிம் ஷாவுடன்  காலை 9 மணிக்கு Iஇஸ்தானா நெகாராவின் மசூதியை வந்தடைந்தனர்.

இஸ்தானா நெகாராவின் சமய துணை அதிகாரி முகமட் ஸுஹைரி முகமட் யாத்திம் தலைமையில் நடைபெற்ற இந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் அதிகாரிகள் மற்றும் இஸ்தானா நெகாரா ஊழியர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் 50-க்கும் மேற்போகாத வருகையாளர்களுடன் எஸ்.ஓ.பி பின்பற்றப்பட்டு நோன்புப் பெருநாள் தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 6.30 மணி தொடங்கி அப்பள்ளிவாசலின் நுழைவாயிலில் பொதுமக்கள் வரிசையில் நின்றாலும் எஸ்.ஓ.பி காரணமாக அவர்கள் அனைவரும் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.

பினாங்கில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பி.கே.பி-இன் எஸ்.ஓ.பி-ஐப் பின்பற்றி அங்குள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

அம்மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் நோன்புப் பெருநாளுக்கான தொழுகை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டது.

காலை 8.30 மணி தொடங்கி 9.15 வரை முதல் அமர்வு, காலை 9.45 மணி தொடங்கி 10.30 வரை இரண்டாம் அமர்வு மற்றும் காலை 11 மணி தொடங்கி 11.45 வரை மூன்றாம் அமர்வும் மேற்கொள்ளப்பட்டன.

பினாங்கு மாநில முதல்வர் துன் அஹ்மட் ஃபூசி அப்துல் ரஸாக்  தமது துணைவி தோ புவான் கத்திஜா முகமட் நோருடன்  மாநில பள்ளிவாசலில் தொழுகையை மேற்கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், கெடா ஸாஹிர் பள்ளிவாசலுக்கு நோன்புப் பெருநாளுக்கான தொழுகையை தமது மக்களுடன் வழக்கம்போல மேற்கொள்வதற்கு மாநில சுல்தான் அல் அமினுல் காரிம் சுல்தான் சாலேஹுடின் சுல்தான் பட்லிஷா வரவில்லை.

பி.கே.பி காரணமாக 20 பேர் மட்டுமே அப்பள்ளிவாசலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

சிலர் பள்ளிவாசலுக்கு வெளியே நின்று சாலை ஓரங்களில் தங்களின் தொழுகையை மேற்கொண்டதைக் காண முடிந்தது.

அதேவேளையில், பகாங் குவாந்தானில் உள்ள புக்கிட் ஊபி மற்றும் ஹுத்தான் செத்தாலி ஆகிய இரு இஸ்லாமிய மையத்து கொல்லைகள் மூடப்படாமல் இருந்தாலும் அங்கு மக்களின் வருகை இல்லாததை பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பின்னர் மையத்து கொல்லைகளுக்குச்  செல்வது இஸ்லாமியர்களின் வழக்கம் என்றாலும், இம்முறை அரசாங்கத்தின் உத்தரவிற்கு ஏற்ப மக்கள் அங்கு செல்லாமல் இருப்பது அவர்கள் அவ்வுத்தரவை மதிப்பதை நிரூபித்திருக்கிறது.

இதனிடையே, திரெங்கானுவிலும் முழு எஸ்.ஓ.பி பின்பற்றப்பட்டு நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

நோன்புப் பெருநாளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் வீடுகள் மற்றும் மையத்து கொல்லைகளுக்குச் செல்வதற்கு இம்முறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளுக்குச் செல்ல அதிகபட்சம் 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இறுதியாக, கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சரவாவிலும் முழு எஸ்.ஓ.பி. பின்பற்றப்பட்டு நோன்புப் பெருநாள் தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு பள்ளிவாசல் மற்றும் சூராவின் கொள்ளளவைப் பொருத்தே அங்கு வருகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா