விளையாட்டு

இத்தாலியப் பொது டென்னிஸ் போட்டி; அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரஃபாயல் நடால்

13/05/2021 04:13 PM

ரோம், 13 மே (பெர்னாமா)-- இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இத்தாலியப் பொது டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரர் ஸ்பெனின் ரஃபாயல் நடால் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

இந்நிலையில், முன்னணி ஆட்டக்காரரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இரண்டாவது சுற்றிலேயே தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரஃபாயல் நடால் உபசரணை நாட்டின் ஜானிக் சின்னரைச்  சந்தித்து விளையாடினார்.

பத்தாவது முறையாக இத்தாலிய பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றும் வேட்கையில் விளையாடி வரும் நடால், 7-5 6-4  என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

அடுத்து நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் நடால்  கனடாவின் டெனிஸ் ஷாப்போவ்லோவை சந்திக்கவிருக்கிறார்.

மற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் அஸ்லான் கராட்சேவ்வைசந்தித்து விளையாடிய உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் டானில் மெட்வெடேஃப் 6-2 6-4 என்ற நேரடி செட்களில் தோல்வி கண்டார்.

இவ்வாட்டம் ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

இதனிடையே, மகளிருக்கான இரண்டாவது சுற்றில் உலகின் எட்டாம் நிலை ஆட்டக்காரர் செரீனா வில்லியம்ஸ் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்க்காவை  சந்தித்து விளையாடினார்.

இதில் வெற்றிப் பெரும் முயற்சியில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா கடுமையாக போராடினாலும், 7-6, 7-5 என்ற நேரடி செட்களில் தோல்வி கண்டார்.

இதுவரை செரீனா கலந்து கொண்ட ஆயிரமாவது ஆட்டம் இதுவாகும்.

தாம் பங்கேற்ற ஆயிரம் ஆட்டங்களில் 39 வயதுடைய செரீனா, 851 வெற்றிகளும் 149 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா