ஒட்டுமொத்த கடன் ஒத்திவைப்பு கடன் பெற்றவர்களுக்கு சிறந்த தீர்வாக அமையாது

11/05/2021 05:31 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கடன் ஒத்திவைப்பு, கடன் பெற்றவர்களுக்கு சிறந்த தீர்வாக அமையாது.

மாறாக, கடன் பெற்றவர்கள் தங்களின் கடனைச் செலுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்கு வங்கிகளின் உதவியை அணுக வேண்டும் என்று பேங்க் நெகா ஆளுநர் டத்தோ நோர் ஷம்சியா முஹமட் யூனுஸ் தெரிவித்திருக்கிறார்.

வேலை இழந்தவர்களுக்கும் வருமானம் குறைந்ததனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு உட்பட கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான உதவித் திட்டங்களை வங்கிகள் கொண்டிருப்பதாக டத்தோ நோர் ஷம்சியா தெரிவித்தார்.

மேலும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் பேங்க் நெகாரா நிதி நிர்வாக ஆலோசனை நிறுவனமான ஏ.கே.பி.கே உட்பட, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பினரின் உதவியை கடன் பெற்றவர்கள் அணுகலாம் என்று அவர் கூறினார்.

இதன் மூலம் கடன் பெற்றவர்கள் தங்களின் நிதி நிலைமைக்கு தகுந்த உதவியைப் பெற்று அதிக செலவையோ கடனையோ எதிர்நோக்கமாட்டார்கள் என்று நோர் ஷம்சியா தெரிவித்தார்.

-- பெர்னாமா