நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி; மலேசியா கணிப்பு

11/05/2021 05:17 PM

கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி (GDP), ஆறு விழுக்காட்டிலிருந்து 7.5 விழுக்காட்டு வளர்ச்சியை அடையும் எனும் கணிப்பில் மலேசியா தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களாக எதிர்மறையான வளர்ச்சிக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சில்லறை வர்த்தகத்தின் குறியீடு 9.6 விழுக்காடு நேர்மறையான வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தேவை மீட்சி பெற்றதால் அக்கணிப்பு வலுப்படுத்தப்படுவதாக பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ நோர் ஷம்சியா முஹமட் யூனுஸ் தெரிவித்திருக்கிறார்.

வேலை வாய்ப்புகள் மற்றும் வெளிப்புற தேவைகளில் படிப்படியான அதிகரிப்பும் இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய அம்சங்களாகும் என்றும் டத்தோ நோர் ஷம்சியா குறிப்பிட்டார்.

அதோடு, அனைத்துலக நாணய நிதியம், ஐ.எம்.எஃப் (IMF) தனது 2021-ஆம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சியை ஜனவரி மாதத்தில் 5.5 விழுக்காடாக நிர்ணயித்து பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6 விழுக்காடாக உயர்த்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கொவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மைகள் குறிப்பாக நோய்ச் சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் இலக்கிடப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிசீலித்த பிறகே 2021-ஆம் ஆண்டின் வளர்ச்சி கணிப்பு செய்யப்பட்டதாக நோர் ஷம்சியா தெரிவித்தார்.

மலேசியாவின் 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி செயல்திறனை இன்று மெய்நிகர் செய்தியாளார் சந்திப்பின்போது வெளியிட்ட நோர் ஷம்சியா அந்த தகவல்களை வழங்கினார்.

-- பெர்னாமா