விளையாட்டு

ஹரிமாவ் மலாயா காற்பந்து குழுவுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

10/05/2021 05:19 PM

புத்ராஜெயா, 10 மே (பெர்னாமா) -- இம்மாத இறுதியில், துபாய்க்கு செல்லவிருக்கும் ஹரிமாவ் மலாயா காற்பந்து குழுவுக்கு, இன்று இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

மே 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் பயிற்சியின் போது, தமது விளையாட்டாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மீதான அச்சத்தை இத்தடுப்பூசி குறைத்திருப்பதாக, தேசிய காற்பந்து தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோ தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டப் பின்னர் கொவிட்-19 நோயின் பதட்டம் சற்று தணிந்திருப்பதால், தாம் தற்போது பயிற்சிக்கு முக்கிய கவனம் செலுத்தப் போவதாக, அவர் குறிப்பிட்டார்.

அதோடு, ஜூன் மாதன் ஐக்கிய அரபு சிற்றரசில் நடைபெறவிருக்கும் 2022-ஆம் ஆண்டு உலக கிண்ணம் மற்றும் 2023-ஆம் ஆண்டி ஆசிய கிண்ணக் காற்பந்து போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்திற்கான சிறந்த வியூகத்தை வகுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயா, ஶ்ரீ செரோஜா மண்டபத்தில், செங் ஹோவுடன் சேர்த்து அதிகாரிகளும் 29 தேசிய காற்பந்து விளையாட்டாளர்களும், இன்று காலை  இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனர்.

-- பெர்னாமா