சிறப்புச் செய்தி

30 பிள்ளைகளுடன் அன்னையர் தினம் கொண்டாடுவதில் தனி மகிழ்ச்சி

09/05/2021 08:42 PM

கோலாலம்பூர், 09 மே (பெர்னாமா) -- அம்பாங், தாமான் பண்டான் இண்டாவில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தங்கம் ஆதரவற்றோர் இல்லத்தில், தங்கியிருக்கும் பிள்ளைகளுடனே ஆண்டுதோறும் தமது அன்னையர் தினம் கொண்டாடி வருவதாக,அதன் நிர்வாகி சசிகலா சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.

நான்கு வயது தொடங்கி 17 வயதிற்கு உட்பட்ட 30 ஆதரவற்ற பிள்ளைகளும் 8 முதியவர்களும் இந்த இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடுகளையும் பூர்த்திச் செய்வதே தமது இலக்காகக் கொண்டு செயல்படுவதாக சசிகலா குறிப்பிட்டார்.

எங்களுக்கு இது ஒரு குடும்பம் என்றும் சொல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினம் இங்கு கொண்டாடுவோம். எனது பிள்ளைகளும் இங்குதான் இருப்பார்கள், என்றார் அவர்.

தமது கணவர் ஜெயக்குமார் செல்லமுத்துவின் தலைமைத்துவத்தில் இயங்கி வரும் இந்த இல்லத்தில், மற்றவர்களைப் போன்று இங்குள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

மேலும்,இக்குழந்தைகளையும் முதியவர்களையும் அன்புடன் பரமாரித்துக் கொள்வதுடன் பாதுகாப்பாக வழிநடத்தப்படுவதாக, இங்கு 15 ஆண்டுகளாக பணிப்புரியும் இளவரசி தெரிவித்தார்.

சொந்த இருப்பிடத்தில் இருப்பது போன்று நாங்கள் இங்கு இருக்கின்றோம். இங்குள்ள பிள்ளைகள் அனைவரும் எனது சொந்தப் பிள்ளைகளாகக் கருதுகிறேன்.

இங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் முதியர்கள் வரை மகிழ்ச்சியாக இருப்பதை, இந்த அன்பு உள்ளம் கொண்டவர்கள் உறுதிச் செய்கின்றனர்.

-- பெர்னாமா