பொது

எஸ்.ஓ.பி : குற்றம் புரிந்தவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும்

08/05/2021 03:08 PM

கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் குற்றம் புரிந்தவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும் என்று மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜித் சிங் அறைகூவல் விடுத்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றுவதில் பொதுமக்கள் மெத்தன போக்குடன் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவதற்கு அவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

''ஒரு சிலருக்கு சமமான தண்டனை வழங்கப்படாததை மக்கள் கவனித்தால், அவர்கள் மட்டும் அவ்வாறு செயல்படலாம், நாங்கள் மட்டுமே ஏன் முடியாது, ஏன் 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எங்களிடம் பணம் இல்லை, எனவே, அமலாக்க பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும், தண்டனையும் சம்பந்தப்பட்டவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

எஸ்.ஓ.பியை பின்பற்றுவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைள் நியாயமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில், அவற்றை மீறுவதில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவர் என்று வெள்ளிக்கிழமை பெர்னாமாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டாக்டர் குல்ஜித் அவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதே முதன்மை நோக்கம் என்பதால் அனைத்து தரப்பினரும் எஸ்.ஓ.பியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில், சில பிரபலங்கள் எஸ்.ஓ.பியை பின்பற்றாமல் செயல்பட்ட சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

-- பெர்னாமா