சிறப்புச் செய்தி

பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்கக் கணினி

06/05/2021 04:40 PM

பீடோர், 05 மே (பெர்னாமா) -- நாட்டில் கொவிட்-19 பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், மாணவர்களுக்கு பி.டி.பி.ஆர் எனப்படும் வீட்டிலிருந்தவாறு இயங்கலை வாயிலாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கின்றன.

இந்நிலையில், நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான பி.கே.பி காலகட்டத்தின் போது, அமலில் இருந்த பி.டி.பி.ஆர் நடவடிக்கை தொழிநுட்ப சாதனங்களைக் கொண்டிருக்காத மாணவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

அதனைக் கருத்தில் கொண்டு, கற்றல் நடவடிக்கையில் இருந்து பின்தங்கி விடக் கூடாது என்பதற்காகப் பேரா, பீடோர் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பி.டி.பி.ஆர் திட்டத்தில் கைப்பேசி அல்லது கையடக்கக் கணினியைக் கொண்டு கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டதால் குறிப்பாக அதற்கு வசதியில்லாத பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடும்.

பெற்றோர்களின் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் பங்கேற்க முடியாதது, பெற்றோர்கள் வீடு திரும்பிய பின்னரே கைப்பேசியை உபயோகப்படுத்துவது, இணைய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல பிரச்னைகளை மாணவர்கள் எதிர்நோக்கியதாக பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன் ராஜன் தெரிவித்தார்.

மாணவர்களின் தேவையைக் கருதி பள்ளி வாரிய தலைவரும் தட்சணாமூர்த்தி அறவாரியத்தின் தலைவருமான டத்தோ ஆனந்தன் தட்சணாமூர்த்தி முதல் கட்டமாக ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு பயிலும் 19 மாணவர்களுக்குக் கையடக்கக் கணினியை வழங்கியதாக அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

''அனைத்து மாணவர்களுக்கும் கையடக்கக் கணினி இருந்தால் அவர்களின் சுமைகளைக் குறைக்கலாம் என்று எண்ணி இந்த யோசனையைப் பள்ளி வாரிய தலைவரிடம் முன் வைத்தேன். அதன் மூலம் நாங்கள் 19 கையடக்கக் கணினிகளை நாங்கள் பெற்றோம்,'' என்றார் அவர்.

கொவிட்-19 நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் நாட்டில் இந்தப் பி.டி.பி.ஆர் திட்டம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தக் கட்டமாகப் பள்ளியின் இதர மாணவர்களுக்கும் இந்தக் கையடக்கக் கணினி வழங்கப் பேச்சுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.

''மேலும், இவ்வாண்டு எங்கள் ஆண்டு பள்ளி உருமாற்றுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகுப்பறைகளையும் மாற்றியமைத்து வருகிறோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, இந்தக் கையடக்கக் கணினி தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்த ஏதுவாக இருப்பதாகவும் பாடங்களை எளிமையாகச் செய்து முடிக்க இயலுவதாகவும் மாணவர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.

-- பெர்னாமா