சிறப்புச் செய்தி

இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 'துஹான் ' சர்ச்சை

04/05/2021 08:28 PM

கோலாலம்பூர், 4 மே (பெர்னாமா)-- இறைவனைக் குறிக்கும் 'துஹான் ' என்ற மலாய் வார்த்தையை டேவான் பஹாசா டான் புஸ்தக்கா (DEWAN BAHASA DAN PUSTAKA) இன ரீதியாக பிரித்திருப்பது, நாட்டின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு பாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பில், நாடு முழுவதிலுமான 20-க்கும் மேற்பட்ட இந்திய பொது இயக்கங்களும் அரசு சார்பற்ற அமைப்புகளும் ஒன்றிணைந்து டேவான் பஹாசா டான் புஸ்தக்காவிடம் ஆட்சேப மகஜரை வழங்கி இருக்கின்றன.

MEREDAH KABUS என்ற தேசிய மொழி சிறுகதை தொகுப்பில், மலாய்க்காரர்கள் எழுதிய பகுதிகளில் TUHAN என்ற சொல்லில், முதல் எழுத்தான T பெரியதாகவும், அதே சொல்லை இதர இனத்தவர்கள் பயன்படுத்திய போது அதன் முதல் எழுத்து சிறியதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுத்தாளர்கள், நூலின் தொகுப்பாளர், மற்றும் ஆலோசனையாளரிடம் விளக்கம் கேட்ட போது, தாங்கள் 'துஹான் ' என்ற வார்த்தையின் முதல் எழுத்தை அனைத்து இனத்திற்கும் சமமாக எழுதியதாகவும் டேவான் பஹாசா டான் புஸ்தக்கா அதனை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர்.

பல ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரு வார்த்தைக்கு வேறு வடிவம் கொடுத்திருக்கும்டேவான் பஹாசா டான் புஸ்தக்காவின் பிரித்தாளும் கொள்கையை சுட்டிக்காட்டியே இந்த ஆட்சேப மகஜர் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய உருமாற்று மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் R.ரவிசந்தர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காணாவிட்டால் நாட்டின் இனங்களுட்டையிலான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதுடன், மற்ற மதங்களை சிறுமைப்படுத்தப்படுவதற்கும் வழி வித்திடும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, இவ்விவகாரத்திற்கு விரைவில் டேவான் பஹாசா டான் புஸ்தக்கா சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக தாம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, டேவான் பஹாசா டான் புஸ்தக்காவின் தலைவர் அங்கு இல்லாததால், அவரின் பிரதிநிதியாக அந்த மகஜரைப் பெற்றுக் கொண்ட ஸரினா, இவ்விவகாரம் குறித்து விரைவில் விளக்கம் அளிப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தாக ரவிசந்தர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா