சிறப்புச் செய்தி

உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்

04/05/2021 08:17 PM

கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) --  ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை, உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நோய் குறித்த முறையான விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் பாதிக்கக்கூடிய ஆஸ்துமா நோய் குறித்த அறிகுறிகள், பரிசோதனை, சிகிச்சை முறைகள் ஆகியறவற்றை தொடர்ந்து காண்போம்.

உலகம் முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்துமா குறித்த தவறான கருத்தை துடைத்தொழிப்பது என்பது, இவ்வாண்டின் கருப்பொருளாகும். ஆஸ்துமா என்னும் ஈளை நோய் நுரையீரலிலுள்ள மூச்சுக்குழாய்களில் ஏற்படும் சுருக்கத்தினால் சுவாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கொலம்பியா ஆசியா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் மலர் சாந்தி சந்திரசேகரன் கூறுகின்றார்.

பெரியவர்களை போன்றே பிள்ளைகளுக்கும் ஒவ்வாமையினாலும், இதர பல காரணங்களாலும் ஆஸ்துமா நோய் அதிகம் ஏற்படுகிறது.

இந்நோய், குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உண்டாக்கிவிடும் என்பதால் அவர்களுக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிக்கு இருந்தால் தாமதிக்காமல் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் மலர் வலியுறுத்தினார்.

''ஆஸ்துமா என்பதை உறுதி செய்த பிறகு தொடர் சிகிச்சை மூலம் ஆரம்ப கட்டமாக இருந்தால் அதை குணப்படுத்தவும், தீவிரமாக இருந்தால் கட்டுக்குள் கொண்டு வரவும் செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் உரிய நேரத்தில் உரிய அளவில் இன்ஹேலர் தெரபி செய்ய வேண்டும். மாத்திரைகளையும் தவிர்க்காமல் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும்,'' என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, புகை பிடிப்பவர்களுக்கும், அவர்களின் அருகில் உள்ளவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு அதிகமாகவே ஏற்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், ஒவ்வாம்மையை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை, அந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகளாகும் என்று டாக்டர் மலர் குறிப்பிட்டார்.

''ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது'' என்று அவர் கூறினார்.

ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்திவிடலாம் என்ற போதிலும், வரும் முன் காத்துகொள்வது அவசியம் என்று டாக்டர் மலர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா