பொது

பெருநாட்கால விலைக் கட்டுப்பாட்டுகளை மீறும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

21/04/2021 09:05 PM

கோலாலம்பூர், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- பெருநாட்கால  விலைக் கட்டுப்பாட்டின் விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிக்கப்பட்டிருக்கும் உத்தரவை பின்பற்றுவதுடன் வியாபாரத்தை நிர்வகிப்பதிலும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு நினைவுறுத்தப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் தங்களின் கடமைகளை நிறைவேற்றினால், பெருநாட்கால விலைக் கட்டுப்பாடு திட்டம் வெற்றியடையும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரம் அமைச்சர், டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்திருக்கிறார்.

பொது சந்தை, பேரங்காடிகள் போன்ற இடங்களில் தங்கள் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருநாட்காலங்களில் அதிக லாபத்தை ஈட்டும் பொறுப்பற்ற வியாபாரிகளிடமிருந்து வாடிக்கையாளர்களைக் காப்பாற்றும் தொடர் முயற்சியாக இது பிரதிபலிப்பதாக நந்தா லிங்கி தெரிவித்தார்.

இதனிடையே, 2021-ஆம் நோன்பு பெருநாள் விலைக் கட்டுப்பாட்டின் விதிமுறைகளுக்கு ஏற்ப, கோழி விற்பனை விலையை ஒருங்கிணைப்பு செய்வதில், உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சான KPDNHEP நாட்டில் உள்ள அனைத்து கோழி விற்பனையாளர்களுக்கும் கால அவகாசம் வழங்கி உள்ளது.

-- பெர்னாமா