அரசியல்

ம.இ.காவிற்கு ஆதரவு இல்லை - ஐ.பி.எப் திட்டவட்டம்

17/04/2021 06:43 PM

ஶ்ரீ கெம்பாங்கான், 17 ஏப்ரல் (பெர்னாமா)-- டான் ஶ்ரீ எம்.ஜி. பண்டிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஐ.பி.எப் கட்சியை, தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக இணைத்து கொள்வதற்கு ஒரு தரப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டி. லோகநாதன் தெரிவித்திருக்கிறார்.

இதன்பொருட்டு, தேசிய முன்னணிக்கு ஐ.பி.எப் தொடர்ந்து நிறைவான ஆதரவை வழங்கி வந்தாலும் இந்தியரைப் பிரதி நிதிக்கும் அதன் உறுப்புக் கட்சிக்கு கட்டாயம் ஆதரவு வழங்காது என்று கட்சி சார்பில் அவர் இன்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் மறைந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ எம். சம்பந்தன் காலம் வரையில், ஐ.பி.எப் தொடர்ந்து தேசிய முன்னணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.

எந்த தரப்போடும் சண்டையை வளர்த்துக் கொள்ள ஐ.பி.எப் விரும்பவில்லை.

மாறாக, அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றவே அது விருப்பம் கொண்டுள்ளது.

ஆனால் ஐ.பி.எப் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தைக்கு கூட சம்பந்தப்பட்ட அக்கட்சி தலைமைத்துவம் தயாராக இல்லை என்றும் டத்தோ லோகநாதன் கூறினார்.

ஐ.பி.எப் கட்சியை விட்டு தனி நபர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல விரும்பினால் கட்சி அவர்களைத் தடுக்காது.

ஆனால், ஒருகாலும் கட்சியை கலைத்து விட்டு ம.இ.கா-வில் ஐ.பி.எப் இணைந்துக் கொள்ளும் சாத்தியம் இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

வரும் 15-ஆவது பொதுத்தேர்தலில்அம்னோ மற்றும் ம.சீ.ச-வுடன் அணுக்கமாக செயலாற்றும் வகையில், 3 நாடாளுமன்றம் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளை ஐ.பி.எப் பரிந்துரைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அக்கட்சிகளும் தங்களின் முதற்கட்ட இணக்கத்தை தெரிவித்து பச்சைக் கொடி காட்டியுள்ளதாக இன்று சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானிலுள்ள விஸ்மா ஐ.பி.எப்-இல் நடைபெற்ற கட்சியின் சிறப்பு ஊடக் சந்திப்புக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா