பொது

நெடுஞ்சாலை கட்டணம் செலுத்தாமை; ஓட்டுநர்கள் நடவடிக்கைக்கு உரிமையாளர் பொறுப்பேற்பு

15/04/2021 04:42 PM

பெட்டாலிங் ஜெயா, 15 ஏப்ரல் (பெர்னாமா)-- நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்போது டோல் கட்டணத்தை செலுத்தத் தவறியது கண்டறியப்பட்டால் கனரக வாகன உரிமையாளர்கள் தங்கள் ஓட்டுநர்கள் அல்லது ஊழியர்களின் நடத்தைக்கு பொறுப்பேற்கும்படி நினைவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

டோல் கட்டணம் செலுத்துவதை வெறுமனே தவிர்க்கும் ஒரு சில வாகனமோட்டிகளின் நடவடிக்கையை தமது தரப்பு கடுமையாக கருதுவதாக நெடுஞ்சாலை குத்தகை நிறுவனமான PLUS, ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தும் சில கட்டண மோசடி யுத்திகளை தமது தரப்பு அடையாளம் கண்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட  தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிளஸ் குறிப்பிட்டிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட டோல் கட்டணத்தை செலுத்த தவறிய ஓட்டுநர் மற்றும் ஊழியரின் நடவடிக்கையால் நிறுவனம் ஒன்றிற்கு VICARIOUS LIABILITY எனப்படும் பகரப் பொறுப்பு எனும் சட்ட அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை அது சுட்டிக்காட்டியது.

BERJAYA LOGISTICS நிறுவனத்தின் வாகன ஓட்டுநர்  பிளஸ் நெடுஞ்சாலையில் டோல் கட்டணத்தை செலுத்த தவறியதைத் தொடர்ந்து ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கும் மேலாக இழப்பீடு கோரி, அந்நிறுவனம் செய்த வழக்கில், 2017ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு அத்தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்நிறுவனத்திற்கு சொந்தமான 19 கனரக வாகனங்கள் பல ஆண்டுகளாக டோல் கட்டணம் செலுத்துவதை வெறுமனே தவிர்த்து வந்ததைத் தொடர்ந்து பிளஸ் நிறுவனம் இழப்பீடு கோரியது.

-- பெர்னாமா