பொது

சட்டத்திற்கு புறம்பாக பெரிக்காத்தான் நேஷனல் செயல்பட்டதில்லை - அஸ்மின் அலி

11/04/2021 09:27 PM

கோலாலம்பூர், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் செயல்பட்டதில்லை.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவுகளும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டவை என்று அக்கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாப்பா பில்லா ஷாவிடம் நம்பிக்கை கூட்டணி மனு ஒன்றை சமர்ப்பித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் பெர்சத்து கட்சி உச்சமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு கூறினார்.

நம்பிக்கை கூட்டணியின் முக்கிய தலைவர்களான கெஅடிலான் கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முஹமட் சாபு, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதற்கு மனு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தனர்.

நாட்டில் கொவிட்19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கடந்த ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் முதலாம் தேதி வரையில் நாடு முழுவதும் அவசரக்கால நிலையை அமல்படுத்த மாமன்னர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா