பொது

18ஆவது மாடியிலிருந்து பரிமளாவைத் தள்ளிவிட்ட கணவர்

11/04/2021 09:33 PM

ஜார்ஜ்டவுன், 11 ஏப்ரல் (பெர்னாமா)-- பினாங்கு, ஆயர் ஈத்தாம் புக்கிட் அவானா சொகுசு அடுக்குமாடியின் தெனாகா நேஷனல் மின்சார விசைப்பலகைக் கொண்ட அறைக்கூரையில் ஓர் இந்தியப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அப்பெண்ணை, அவரின் கணவர் 18-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மரணமடைந்த 35 வயதுடைய எஸ்.பரிமளாவின் சடலம், சனிக்கிழமை நள்ளிரவு 12.06 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சோஃப்பியன் சந்தோங்  தெரிவித்தார்.

ஒரு காப்புறுதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்த அப்பெண் ரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக சோஃப்பியன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து சமையல்காரராக பணியாற்றும் அவரின் கணவரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், தமது மனைவி மற்றொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் தங்களுக்கு இடையில் நிகழ்ந்த சண்டையின் போது தாம் அவரை கீழே தள்ளிவிட்டதாக பரிமளாவின் கணவர் தெரிவித்தாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.

இச்சம்பவம் குற்றவியல் நடைமுறை சட்டம் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இவ்விசாரணைக்கு உதவும்பொருட்டு அவ்வாடவர் ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சோஃப்பியன் கூறினார்.

-- பெர்னாமா