பொது

இன்று 1,739 புதிய சம்பவங்கள்; எண்மர் மரணம்

11/04/2021 08:08 PM

புத்ராஜெயா, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில், ஆயிரத்து 739 சம்பவங்கள் பதிவாகி இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதனைத் தொடந்து, இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்து 856-ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா  இன்று ஞாயிற்றுகிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்புதிய சம்பவங்களில், ஆயிரத்து 731 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும், எட்டு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் டான் ஶ்ரீ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.

அதில், சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 535 சம்பவங்களும், அதைத் தொடர்ந்து சரவாவில் 443 சம்பவங்களும், பதிவாகி இருக்கின்றன. அதேவேளையில், பினாங்கு, கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் சபாவிலும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நோயினால் இன்று எண்மர் மரணமடைந்திருக்கும் வேளையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 183 பேரில், 81 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா