உலகம்

இந்தியாவில் தினமும் அதிக எண்ணிக்கையில் கொவிட்-19 சம்பவங்கள் பதிவு

11/04/2021 03:44 PM

புதுடெல்லி, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக புதிய உச்ச எண்ணிக்கையில் தினசரி கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று இதுவரை பதிவாக அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152,879 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருப்பது உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு, அப்பெருந்தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 839 பேர் பலியாகி இருக்கின்றனர்.

அந்நாட்டில் இதுவரை, 1 கோடியே 33 லட்சத்து 58,805 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 169,275 மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.

தமிழகத்தில் கொவிட் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு 5,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்நோய் தொற்றியிருந்தால் அத்தெரு அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

இப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்து உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 846 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று சனிக்கிழமை முதல் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், அரசுப் பேருந்துகளில் நின்றவாறு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுப்பு உட்படபல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, வரும் 13ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா