அரசியல்

ஆதிக்கம் கொண்ட அரசியல் கட்சி ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும்

04/04/2021 07:42 PM

சிரம்பான், 04 ஏப்ரல் (பெர்னாமா) --ஆதிக்கம் கொண்ட ஓர் அரசியல் கட்சி, இறுதியில் மக்களின் நலனை புறக்கணிக்கும் அளவிற்கு, நாட்டின் அரசியலில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படாமல், மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய அரசியல் சூழல் நாட்டிற்கு தேவைப்படுவதாக, மூத்த அரசியல்வாதி டான் ஶ்ரீ டாக்டர் ராயிஸ் யாத்திம் தெரிவித்திருக்கிறார்.

''நாம் மனிதர்களிடம் அல்லது சட்டங்களில் ஆதிக்கம் செலுத்த கூடாது. சட்டம் எதைக் கூறுகிறதோ அதையே நாம் பின்பற்ற வேண்டும். ஆதிக்கம் செலுத்தும் கட்சி தேவையில்லை. லட்சக்கணக்கான அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்கள் இருந்தாலும், நாட்டை நிர்வகிப்பதில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு, சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்,'' ராயிஸ் யாத்திம் குறிப்பிட்டார்

ஒரு தலைவர் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், நாட்டை நிர்வகிப்பதில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதோடு உயர் பதவியை வகிக்கும்போது, ஆணவமாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா