AKAL BUDI அறவாரியத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 93 லட்சத்துக்கு மேல் சாஹிட் கையாடல்

18/03/2021 07:45 PM

கோலாலம்பூர், 18 மார்ச் (பெர்னாமா) -- 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், AKAL BUDI அறவாரியத்தின் வங்கி கணக்கில் இருந்து, 93 லட்சத்து 2 ஆயிரத்து 823 ரிங்கிட் 66 சென்னை, முன்னாள் துணைப் பிரதமர், டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி எடுத்ததாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தாம் மேற்கொண்ட விசாரணையில், 2018-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி, அப்பணம் அவரின் தம்பியான, டத்தோ ஶ்ரீ முஹமட் நசயீ அஹ்மாட் தர்மிசிக்கு சொந்தமான அல்-ஃபாலா அறவாரியத்திற்கு மாற்றப்பட்டதாக அரசு தரப்பின் இறுதி சாட்சியாளரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்.-மின் விசாரணை அதிகாரியுமான, கைருடின் கிலாவ் கூறியிருக்கிறார்.

AKALBUDI அறவாரியத்தின் முதன்மை கையெழுத்திடுபவர், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் என்பதால், பணத்தை மற்ற வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பதாகவும் கைருடின் குறிப்பிட்டார்.

அப்பணத்தை வங்கி கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பான முதன்மை பரிசோதனையில், அரசு தரப்பு வழக்கறிஞர், லீ கெங் ஃபாட் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

AKAL BUDI அறவாரியத்தின் நிதியை உட்படுத்தி கள்ளப்பணம் பரிமாற்றம், ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கும் சாயிட் ஹமிடியின் 55-வது வழக்கு விசாரணையில் 99-வது சாட்சியான கைருடின், அப்பணப் பரிமாற்றம் குறித்து தாம் தெளிவாக இல்லை என்றும் தெரிவித்தார்.

அதோடு, அப்பணம் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா