பொது

நாளை முதல் கடைகள் இரவு 10 மணி வரையில் செயல்பட அனுமதி

28/01/2021 07:57 PM

கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள், மருந்தகம், சுய சலவைக் கடைகள், மற்றும் மூக்கு கண்ணாடி கடைகள் இரவு 10 மணி வரையில் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது.

இது நாளை தொடங்கி அமல்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு. பி.கே.பி மற்றும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு PKPB அமலாக்கத்தின் போது அனுமதி வழங்கப்பட்ட வர்த்தகங்களின் செயல்பாட்டு நேரத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இஸ்மாயி சப்ரி கூறியிருக்கிறார்.

அதோடு சம்பந்தப்பட்ட வர்த்தகத் துறை மீது சுகாதார அமைச்சு மேற்கொண்ட இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இதனிடையே கொவிட்-19 பரவல், நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தரவிதிமுறை ஆகியவற்றைப் பின்பற்றாத காரணத்தினால் 9 தொழிற்சாலகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பி.கே.பி-தை மீறிய குற்றத்திற்காக நேற்று 494 கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 464 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், 29 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா