சிறப்புச் செய்தி

ஆள்நடமாட்டமின்றி காணப்படும் பத்துமலை திருத்தலம்

28/01/2021 07:50 PM

சிலாங்கூர், பத்துமலை, 28 ஜனவரி (பெர்னாமா) -- முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!

என்று வேல் கொண்டு காட்சி தரும் வேலவனை உலககெங்கும் உள்ள பக்தர்கள் வேண்டி நிற்கும் தைப்பூசத் திருநாள் இன்று..!

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமும் அதனால் அமலுக்கு வந்துள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவாலும், நாட்டில் இந்நாள் மிதமான அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. 

வரலாற்றில் முதன் முறையாக, தைப்பூசத் திருநாளின் போது, நாட்டிலுள்ள அனைத்து முதன்மையான முருகன் ஆலயங்களின் வாசல்கள் அடைக்கப்பட்டு, பக்தர்களின்றி களை இழந்திருக்கிறது.

சிலாங்கூர், பத்துமலையில் அமைந்திருக்கும் முருகன் திருக்கோயிலும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் நன்நாளில், முருகனுக்கு எடுக்கப்படும் விழாவான தைப்பூசம் மலேசியாவில், இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதற்கேற்ப, பக்தர்கள் பத்துமலையில் வெள்ளமாகத் திரண்டு, 272 படிகளைக் கடந்து, மலையின் உச்சியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் தரிசனத்தைப் பெறுவார்கள்.

தைப்பூசம் என்றாலே, முருகப் பெருமானை அடுத்து, பத்துமலையில் அதிகம் இடம் பிடித்துக்கொள்வது காவடிகள்தான்.  

பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, மச்சக் காவடி, முருகன் காவடி, மயில் காவடி, கரும்புக் கவடி என்று பக்தர்கள் தங்களின் தோள் மீது சுமந்து செல்லும் காவடிகளைக் காண கூட்டம் இங்கு லட்சத்தைத் தாண்டும்.  

ஆனால், இம்முறை அனைத்துமே புதிய இயல்பில் காணாமல் போயிருந்தது. 

பால்குடம் ஏந்தி, அலகு குத்தி, தேங்காய் உடைத்து, முடிக் காணிக்கைச் செலுத்தி வீதி எங்கும் பக்தி பரவசம் பொங்க, வண்ண வண்ணக் காவடிகள் பவனி வரும் அழகோடு காட்சியளிக்கும் பத்துமலைத் திருத்தலத்தின் நுழைவாயில், இன்று அடைக்கப்பட்டிருப்பது வருத்ததை ஏற்படுத்துகிறது.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த ஒன்றுக்கூடும் கோலாகல பத்துமலை இன்று வெறுச்சோடி காணப்பட்டது.

பொது மக்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படாத நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான ஆலய நிர்வாகத்தினரையும் அர்ச்சகர்களையும் மட்டுமே உட்படுத்தி பத்துமலை தைப்பூச சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

அதுமட்டுமின்றி, பத்துமலை திருத்தலத்தை நோக்கி செல்லும் பாதையிலும் அதன் பிரதான நுழைவாயிலும், பொதுமக்கள் ஆலயத்தினுள் நுழைவதைத் தடுக்க போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் தங்களின் பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

2021-ஆம் ஆண்டின் தைப்பூசம் பெரிதளவில் களை கட்டவில்லையென்றாலும்,  பத்துமலை, ஶ்ரீ சுப்ரமணியனின் ஆலயத்தில், நடைப்பெறும் அபிஷேகங்களையும், சிறப்பு பூஜைகளையும், மக்கள் WE LOVE BATU CAVES முகநூல் அகப்பக்கம் வாயிலாக நேரடியாகக் காணலாம் என்று ஆலய நிர்வாகம் கூறியுள்ளது.

--பெர்னாமா