BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

ஈப்போ கல்லுமலை ஆலய நுழைவாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம்

28/01/2021 07:39 PM

ஈப்போ, 28 ஜனவரி (பெர்னாமா) --பிரமாண்ட ராஜகோபுரத்தோடு, ஏழு கலசங்களைத் தாங்கி காட்சியளிக்கும் ஈப்போ கல்லுமலை ஆலயத்தில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத்தில், திருச்செந்தூர் நாயகனின் சாயலில் வீற்றிருக்கும், சுப்ரமணியரின் ஆசியைப் பெற லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் 

ஆனால், இவ்வாண்டு மக்கள் நடமாட்டம் ஏதுமின்றி ஆலயம் வெறிச் சோடிக் காணப்பட்டதுடன், ஆலயத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுருந்ததை பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்தது.

நாட்டின் முக்கிய முருகன் திருத் தலங்களில் ஒன்றான பேரா, ஈப்போ, கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஆலயத்தின் முதன்மை வாயிற்கதவு  அடைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்று காலை தொடங்கி சில பக்தர்கள் ஆலயத்தின் நுழைவாயிலில் நின்று வடிவேலனை உளமாற தரிசித்துச் சென்றதைக் காண முடிந்தது.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு உட்பட்டு செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பின்பற்றி தைப்பூசம் கொண்டாட்டப்பட்டதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகானந்தா கூறினார். 

''இவ்வாண்டு குறைந்த அளவிலான அதாவது பத்து பேரைக் கொண்டே தைப்பூசத்தைக் கொண்டாடினோம். இந்தக் கொண்டாட்டத்தில் வெளிநபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதைக் கண்காணிக்க காவல் துறையினரும் கடமையில் ஈடுபட்டு வந்தனர். எவ்வித குறையுமின்றி ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன. முருகப் பெருமானும் ராஜ அலங்காரத்துடன் வீற்றிருந்தார்,'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தின் போது அறுபடை நாயகனை கோலகலமாக வரவேற்ற நிலை மாறி, இவ்வாண்டு ஆலயத்திற்கு வெளியில் நின்று வழிபட்டுச் செல்வது வருத்தம் அளிப்பதாக பக்தர்கள் கூறினர்.

மேலும் அடுத்த ஆண்டு கொவிட் பெருந்தொற்றிலிருந்து நாடு முற்றாக விடுபட்டு, மீண்டும் பழையபடி முருகப் பெருமானை தரிசிக்க தாங்கள் காத்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

--பெர்னாமா