சிறப்புச் செய்தி

பொங்கல் பாடல் உருவாக்கும் போட்டி வெற்றியாளர்களின் அனுபவங்கள்

26/01/2021 09:01 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, பொங்கல் தமிழ்ப் பாடல் உருவாக்கும் போட்டியின் முடிவுகள், நேற்று பெர்னாமா செய்தியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இப்போட்டிக்கு நாடு முழுவதிலும் இருந்து அனுப்பப்பட்ட 20 பாடல்களில், மூன்று பாடல்கள் மட்டுமே மிக சிறந்த பாடல்களாக நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஏட்டில் எழுதிய கவிதையில் தொடங்கி, இன்று ஒரு சிறந்த பாடலாக உருவாகிய அனுபவங்கள் குறித்து, வெற்றியாளர்கள் பெர்னாமா தமிழ்ச் செய்தியிடம் பகிர்ந்து கொண்டனர்.

இனம், மொழி, பண்பாட்டு உணர்வை மேலோங்கச் செய்யும் தமிழர் திருநாள் நிகழ்வுகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.

இதன் வழி இந்நாட்டிலுள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதோடு, பல்வேறு துறைகளில் ஆற்றலும் ஆளுமையையும் கொண்டுள்ள இளைஞர்களை அடையாளம் காண முடியும் என்கிறார், பொங்கள் பாடல் போட்டியின் வெற்றியாளர் அன்பழகன் அன்பரசன்.

''இனி வரும் காலங்களில் இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடைப்பெற வேண்டும். இதனால் எங்களை போன்ற உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்'' என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப இந்த 'உவகை தரும் உழவர் தினம்' பாடலுக்கு கிடைத்த இரண்டாம் நிலை பரிசு, இசைத் துறையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு பெரும் தூண்டுதலாக இருப்பதாக தாரணி தேவி சரவண குமார் குறிப்பிட்டார்.

''இந்த வெற்றி, இவ்வருடம் சிறந்த ஆண்டாக அமையும் என்ற ஒரு நம்பிக்கையை அளித்திருக்கின்றது. இது போன்ற தரமான படைப்புகளை வழங்குவதற்கான புத்துணர்வை கொடுக்கின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், தாங்கள் உருவாக்கிய இந்த பாடல்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கேட்டு இன்புற வேண்டும் என்று மூன்றாம் நிலை பரிசை வென்ற 'பொங்கலோ பொங்கல்' எனும் பாடலுக்கு இசை அமைத்த கண்ணன் ஆறுமுகம் கூறினார்.

இதனிடையே, இம்மாதிரியான போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தராமான உள்ளூர் படைப்புகள் அதிகம் வெளிவரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

--பெர்னாமா