பொது

தொலை தொடர்பு சாதன விற்பனைக் கடைகளில் கூடும் பெற்றோர்

24/01/2021 06:27 PM

கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- 2021-ஆம் ஆண்டின் பள்ளி தவணை கடந்த ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கியது.

தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, நாட்டின் கல்வி முறையை தற்காலிகத்திற்கு மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ள வேளையில், மாணவர்கள் வீட்டில் இருந்தவாரே இயங்கலை வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இயங்கலை வழி மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இலகுவாக நடைப்பெறவும் தங்கள் பிள்ளைகள் இதில் பின் தங்கி விடக்கூடாது என்பதை உறுதிசெய்யவும், வார இறுதி விடுமுறையில் பெற்றோர்கள் தொலை தொடர்பு சாதனங்களை விற்கும் கடைகளில் கூடியிருப்பது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்திருக்கிறது.

2020-ஆம் ஆண்டுக்கான முக்கிய தேர்வுகளை எழுதவிருந்த மாணவர்கள் மட்டும், ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கி பள்ளிக்குச் சென்று நேரடியாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, அனைத்து ஆரம்பப்பள்ளி மற்றும் படிவம் 1 தொடங்கி படிவம் 5 வரையிலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வீட்டில் இருந்தவாரே இயங்கலை வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, தங்கள் பிள்ளைகளுக்கு இதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான கணினி மற்றும் இதர தொலை தொடர்பு சாதனங்கள் விற்கும் கடைகளில் பெற்றோர்கள் கூடியிருப்பதைக் காண முடிந்தது.

இதனால், ஒரு நாளுக்கு தங்களின் வியாபாரம் 50-இல் இருந்து 70 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தொலை தொடர்பு சாதனங்களை விற்கும் வியாபாரிகளில் சிலர் தெரிவித்தனர்.

''இதற்கு முன்னர் அனைத்தும் முடக்கம் கண்ட நிலையில் வியாபாரம் சற்று மந்தமாகவே இருந்தது. இம்முறை அதிகமான மாணவர்கள் இயங்கலை வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், வியாபாரமும் அதிகரித்து வருகிறது,'' என்று முஹமட் ஷாமின் ஷம்சுடின் கூறினார்.

''ஒரு நாளுக்கு அதிகபட்சம் 1-இல் இருந்து 2 மடிக்கணினிகள் மட்டுமே விற்கப்பட்டன. ஆனால், தற்போது 5-இல் இருந்து 6 மடிக்கணினிகள் ஒரு நாளுக்கு விற்படுகின்றன,'' என்று முஹமட் சைனுடின் ரொஃபி விவரித்தார்.

அதேவேளையில், கொவிட்-19 பெருந்தொற்றை முற்றிலுமாக துடைத்தொழிப்பதற்கான முயற்சியாக மாணவர்கள் வீட்டில் இருந்தவாரே இயங்கலை வழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் இம்முடிவு வரவேற்கக்கூடியது என்று பெற்றோர்களில் சிலர் கூறினர்.

''இந்த காலக்கட்டத்தில், இயங்கலை வழி மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வரவேற்கக்கூடிய ஒன்றுதான். எனினும், தொலை தொடர்பு சாதனங்களின் விலை அதிகமாக இருப்பதால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இது சற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் மறுபதற்கில்லை,'' என்று பட்ரூல் சாமான் பாப்கான் கூறினார்.

இதனிடையே, தொலை தொடர்பு சாதனங்களுக்குப் பெர்மாய் எனுப்படும் மலேசிய பொருளாதாரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு உதவித் திட்டத்தின் மூலம், இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி 18-ஆம் தேதி பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா