சிறப்புச் செய்தி

படைப்பிலக்கியத்தின் மீது ஈர்ப்பு கொண்டுள்ள இளம் தலைமுறையினர்

22/01/2021 07:59 PM

எழுத்து: திவ்யப்பிரியா மணிமாறன்

கோலாலம்பூர், 22 ஜனவரி (பெர்னாமா) -- சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டியாகத் திகழும் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் எதிர்காலம், தற்போது அத்துறையில் ஈடுபடும் இளம் எழுத்தாளர்களை அடித்தளமாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது.

தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் மீது இந்திய இளைஞர்கள் ஆர்வம் கொண்டுள்ளனரா என்ற கேள்வி, மொழி நெறியாளர்களிடையே இருக்கும் நிலையில், அதை இளம் தலைமுறையினர் மெய்பித்து காட்டியுள்ளதைப் பெர்னாமா தமிழ்ச்செய்தி பதிவு செய்திருக்கின்றது.

வாழ்ந்து காட்டும் வாழ்க்கையைச் சொற்களால் கூறுவதே சிறுகதை, கவிதை, நாவல், பாடல் என நால்வகை பகுப்புகளைக் கொண்ட தமிழ் படைப்பிலக்கியங்களாகும்.

ஒரு நிகழ்ச்சி அல்லது செய்தியைக் கூற விழைகிற எழுத்தாளர் தனது படைப்பினைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயற்சிக்கும்போது உருவாக்கப்படும் படைப்புதான் கவிதையாகும்.

இளம் எழுத்தாளர்கள் மத்தியில் புதுக்கவிதை திறன் மேலோங்கி இருக்கும் நிலையில், மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றலும் ஒரு சிலரிடத்தில் காணப்படுவதை மறுக்க முடியாது.

இதன் அடிப்படையில், சுய முயற்சியில் யாப்பிலக்கணத்தைக் கற்று மரபு கவிதைகளைப் படைத்து வருவம் இளம் எழுத்தாளர்கள் சிலரைப் பெர்னாமா அடையாளம் கண்டுள்ளது.

''புதுகவிதைகளை அதிகமாக எழுதி கொண்டிருந்த வேளையில், மரபு கவிதைகளை எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆதலால், எனது ஆசிரியரிடம் யாப்பிலக்கணம் கற்று கொண்டு, தற்போது மரபு கவிதைகளைப் படைத்து வருகிறேன்,'' என்று தினேஷ் மகாமுனி கூறினார்.

''தப்பாச்சி பூச்சி தவம், இரு மொழி பாடத் திட்டம், வேல்விளையாழ் போன்ற பல கவிதைகளில் எழுதியுள்ளேன். அவற்றில் பெரும்பான்மையானவை வென்பாக்களாகும். எட்டு ஆண்டுகளாக இலக்கியத் துறையில் பயணிக்கும் எனக்கு எதிர்காலத்தில் தரமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது,'' என்று ஹரிராஸ்குமார் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதனிடையே, இசையின் பரிமானத்திற்கு ஏற்ப அழகிய தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, அதன் நயமும் பொருளும் மாறாது உருவகப்படுத்தி, முத்து முத்தான இரண்டு பாடல்களை புனைந்துள்ளார் இளம் பாடலாசிரியர் இளமாறன் நாகலிங்கம்.

''நான் எழுதிய 'உனை பாடுகிறேன் அம்மா' என்ற முதல் பாடல் அன்னையர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி, மணிவேலன் இசையில் உருவான 'நித்தம்' என்ற பாடலையும் நான்தான் எழுதினேன். இப்பாடலே எனக்கு மலேசியாவின் இளம் பாடலாசிரியர் என்ற அங்கீகாரத்தை வழங்கியது,'' என்று இளமாறன் பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டார். 

மேலும், உள்ளத்து உணர்வுகளையும் சமுதாயத்தின் அவலங்களையும் உரக்கச் சொல்லும் கருவியாக விளங்கும் சிறுகதை எழுதுவதற்குச் சுலபமாக இருந்தாலும் அதன் கருப்பொருளும் அதற்கான நெறிகளும் சீர்குலையாது பின்பற்றப்படுவது கடினமான ஒன்றாகும்.

சமுதாயத்தின் முகவரிகளாகவும் பிம்பங்களாகவும் இருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சிறுகதைகளைப் படைத்து வருவதாக இளம் சிறுகதை எழுத்தாளர்களில் சிலர் தெரிவித்தனர்.

''ஒவ்வொரு சிறுகதையும் வாசகர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அதோடு, எனது கைவண்ணத்தில் மலரும் அனைத்து சிறுகதைகளும் நகைச்சுவை உணர்வில் அமைந்திருப்பதை நான் எப்பொழுதும் உறுதி செய்து கொள்வேன்,'' என்று தனுஷா இளமுருகன் கூறினார்.

''சிறுகதைகளை எழுதும் உத்திகளை அறியும் நோக்கில், தொடக்கத்தில் பல சிறுகதை நூல்களை வாசித்தேன். என்னால் சிறந்த சிறுகதைகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு, சிறுகதைகளைத் எழுத தொடங்கினேன்,'' என்று  திவ்யா சுப்ரமணியம் தனது சிறுகதை பயணத்தைப் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மலேசிய தமிழ் படைப்பிலக்கியத்தில் இளைஞர்களிடையே ஈடுபாடு இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காட்டிலும், இத்துறையில் அவர்களின் ஆளுமைகள் இலைமறைக் காய் போல மறைந்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மனிதனுக்கு வேண்டிய புறவாழ்வுப் பொருள்களை நாகரீக உலகம் உருவாக்கித் தந்தாலும், அக வாழ்வு ஒழுங்கினைப் படைப்பிலக்கியம் ஒன்றே பறை சாற்றுகின்றது.

-- பெர்னாமா