பொது

கெடாவில் தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து ; ம.இ.கா கண்டனம் 

21/01/2021 08:19 PM

கோலாலம்பூர், 21 ஜனவரி (பெர்னாமா) -- கெடா மாநில தைப்பூச சிறப்பு விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக,அம்மாநில மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹமட் நோர் அறிவித்திருப்பது சமுதாயத் தலைவர்களிடையே, பெரும் அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கெடாவில், எத்தனையோ போராட்டங்களுக்குப் பின்னர் பெறப்பட்ட தைப்பூச சிறப்பு விடுமுறை, ரத்து செய்யும் அறிவிப்பானது கண்டனத்துகுறியது என்று ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலக்கட்டத்தில் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், பக்தர்கள் வீட்டிலேயே இருந்து விரதம் இருந்து இறைவனுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு இந்த விடுமுறை பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதனை ஏன் முகம்மாட் சனுசி தடுக்க வேண்டும்? எந்த இந்திய அமைப்புடன் அல்லது அரசியல் கட்சியுடன் கலந்து பேசி அவர் இம்முடிவை எடுத்தார்? என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, இது தொடர்பில் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன், இனவாத முறையில் செயல்பட்டு வரும் கெடா மந்திரி புசாரின் நடடிக்கையை கண்டித்துள்ளார்.

''அரசியல் வேறுபாடுகளை கலைந்து ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்கு கண்டனம் குரல் தெரிவிக்காவிட்டால் நிச்சயமாக எதிர்காலங்களில் இதைவிட அதிகமாக சில நடவடிக்கைகள் அவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகைகள் கிடையாது, சில பண்டிகைகளை கொண்டாடக்கூடாது என்று அவர்கள் கூற வாய்ப்புகளும் உள்ளது,'' என்றார் அவர்.

நாட்டில், இந்தியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்களை இந்திய சமூகம் ஒன்றிணைந்து கேள்வி, தங்களின் உரிமைகளைத் தற்காத்துக்கொள்ள போராட வேண்டும் என்றும் சரவணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அதேவேளையில், அம்மாநிலத்தில் கோயில் உடைப்புக்குப் பின்னர், மீண்டும் இத்தகையை செயல், அம்மாநில இந்தியர்களை பெருமளவில் வருத்தமடையச் செய்துள்ளதாக கெடா மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ். ஆனந்தன் கூறுகின்றார்.

''ஒரு மாநில முதல்வர் இம்மாதிரி செய்வது சரியல்ல என்று நாங்கள் கருதுகின்றோம். இந்துகள் சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிய வேண்டும் என்றால் ம.இ.காவை நாடலாம். அரசு சார்பற்ற இயக்கங்கள், வர்த்தகம் சங்கம் மற்றும் இந்து சங்கம் ஆகியோரை கலந்துரையாடி இந்த முடிவை எடுத்ததாக கெடா மந்திரி புசார் கூறியிருக்கிறார். ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை,'' என்றார் அவர்.

அதோடு, பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி உட்பட பலர் இயங்களுக்கும் இந்த அறிவிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

--பெர்னாமா