சிறப்புச் செய்தி

தைப்பூசம் 2021 : தேங்காய் விற்பனையில் பாதிப்பு

20/01/2021 08:39 PM

கோலாலம்பூர், 20 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்19 பெருந்தொற்று காரணத்தால், தைப்பூச திருவிழா கொண்டாட்டங்களுக்கு  அனுமதி வழங்கப்படாததை அடுத்து, அதன் முதன்மை தேவைகளில் ஒன்றாக இருக்கும், தேங்காய் விற்பனைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும், தைப்பூசக் காலக் கட்டத்தில், ஆயிரக் கணக்கில் விற்பனையான தேங்காய்கள் இம்முறை தோட்டங்களில் இருந்து, வந்திறங்கிய போதும் வாசலைத் தாண்டாமலே இருப்பது வேதனை அளிப்பதாக ''JOEZ COCONUT'' உரிமையாளர் ஜோவெல் ஜெயசந்திரன்  கூறியுள்ளார். 

பினாங்கு, ஜார்ஜ்டவுனின் ஜாலான் டத்தோ கெராமாட் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல், தேங்காய் விற்பனையில் ஈடுப்பட்டும் ஜோவெல் ஜெயசந்திரன் சமய விழா கால கட்டத்தில், அதிகமான தேங்காய்களைன் விற்பனை செய்து வருபவர் ஆவார்.  

பெருந்தொற்று தாக்கமும், அதனால் அமலுக்கு வந்திருக்கும் நடமாட்டக் கட்டுபாடு உத்தரவுகளும் தங்களின் தொழிலை பெரிய அளவில் முடக்கியுள்ளதாக ஜோவெல் ஜெயசந்திரன்  பெர்னாமா தமிழ்ச் செய்தியிடம் கூறினார். 

'ஆண்டுதோறும் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை தேங்காய்களை விற்பனை செய்வோம். ஆனால், இம்முறை எங்களின் வியாபாரத்திற்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் அப்படியே இருக்கின்றன'', என்று ஜோவெல்  குறிப்பிட்டார். 

குறிப்பாக, இந்தத் தைப்பூச காலத்தில், தங்களின் வியாபாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை 36 வயதுடைய, ஜோவெல் சுட்டிக் காட்டினார். 

சிறப்பு பூஜைகளுக்காகவும், பொது மக்களின் வேண்டுதல்களுக்காகவும் ஆலயங்களில் தேங்காய்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். 

ஆனால், ஆலயங்கள் தற்போது திறக்கப்படாத போது, தேங்காய்களின் தேவைகளும் இல்லாமல் போனதால், இந்தத் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருமே பாதுக்கப்படுவதாகவும் ஜோவெயில் வருத்தத்துடன் கூறுகின்றார். 

இதனிடையே, தங்களின் குத்தகை அடிப்படையில், பேரா பாகான் டத்தோவில், அமைந்துள்ள தென்னைத் தோட்டத்தின் உரிமையாளருக்கு 80 ஆயிரம் தேங்காய்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், தங்கள் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக, தேங்காய் விற்பனையில் ஈடுப்பட்டுள்ள தி.முத்துமாணிக்கம் குறிப்பிடுகின்றார். 

''இருப்பினும்,  பினாங்கு சுற்றியுள்ள பொதுச் சந்தைகளிலும், ஈப்போ, கோலாலம்பூர் போன்ற வெளி மாநிலங்களிலும், தேவைக்கேற்ப தேங்காய்களைச் சந்தைப்படுத்த ஒரு வழியை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்'', தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும், பினாங்கில், தைப்பூச திருவிழாவின் போதும் , இரத ஊர்வலங்களின் போதும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்யப்படும் இடங்களில் இம்முறை வாயிப்பில்லாமல் போனதில் பேரிழப்பே ஏற்பட்டுள்ளதாக முத்துமாணிக்கம் தெரிவித்தார். 

--பெர்னாமா