உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

20/01/2021 04:16 PM

அமெரிக்கா, 20 ஜனவரி (பெர்னாமா) -- இன்றுடன் நிறைவடையும் தமது பதவி காலத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர், டொனல்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் தாம் பதவியில் இருந்த வரையில் கடினமான போராட்டங்களையும் தேர்வுகளையும் சந்தித்ததாகத் தெரிவித்திருந்தார்.

கொவிட்-19 நோயினால் ஆயிரக்கணக்கானோரின் மரணங்கள் பெருமளவில் பாதித்திருக்கும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் வன்முறை போன்ற நிலைத்தன்மையற்ற அமெரிக்காவை டொனல்ட் டிரம்ப், அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார்.

மீண்டும் உலகமே வியந்து பார்க்கும் நிலைக்கு அமெரிக்காவை இட்டுச் செல்ல ஜோ பைடன் அரசாங்கத்திற்கு டொனல்ட் டிரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா

இதனிடையே, அமெரிக்கா நேரப்படி நாளை நடைப்பெறவிருக்கும் அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் வைபவத்தை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி-யில் இதுவரை கண்டிராத அளவிலான பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தை டொனல்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டத்தைத் தொடர்ந்து அத்தகைய போராட்டங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க 25,000-கும் அதிகமான இராணுவ வீரர்கள் அப்பகுதியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சான் ஜூவான், அர்ஜெண்டினா

அர்ஜெண்டினாவின் மேற்கு-மத்தியப் பகுதியை, 6.8 ரிக்டர் அளவில் உலுக்கிய பின்னர், தொடர்ந்து ஐந்து சக்தி வாய்ந்த அதிர்வுகளும் ஏற்பட்டன.

இதனால், எந்தவொரு உயிர் உடல் சேதங்களும் பதிவாகாத நிலையில் சான் ஜூவான் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கட்டிடங்கள் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கத்தின் அதிர்வு, அண்டை நாடான சிலியிலும் உணரப்பட்டது.

ஷாண்டோங், சீனா

சீனா, ஷாண்டோங் மாகாணத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்கிக் கொண்ட 22 தொழிலாளர்களில் 12 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பது நாட்களுக்கும் அதிகமாக அதனுள் சிக்கிக் கொண்டிருக்கும் அவர்களிடமிருந்து மீட்கும் பணியை நிறுத்த வேண்டாம் என்ற துண்டுச் சீட்டுப் பெற்றப் பின்னர் மீட்புக் குழுவினர் 600 மீட்டர் நிலத்தடியில் இருக்கும் அவர்களுடன் தொடர்புக் கொள்ளும் வழியை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

அதோடு, அவர்களுக்கு முதலுதவி, உணவு மற்றும் அடிப்படை தேவைகள் உள்ளே அனுப்பப்பட்டிருக்கின்றன.

-- பெர்னாமா