உலகம்

கொவிட்-19: அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது

20/01/2021 03:04 PM

அமெரிக்கா, 20 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்காவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது.

அதோடு, அந்நாட்டில் அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 41 லட்சத்து எட்டாயிரமாக அதிகரித்திருப்பதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு லட்சமாக இருந்த கொவிட்-19 நோயாளிகளின் மரண எண்ணிக்கை சுமார் நான்கு மாதத்தில் இரண்டு லட்சமாகப் பதிவாகியது.

அதோடு, மூன்று மாதங்களில் இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாகப் பதிவாகியது.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் மிக அதிகமாக அதாவது 41,350 மரணச் சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவில் 33,763 மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அமெரிக்காவின் மொத்த மரண எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்த வேளையில் ஒரு மாதத்தில் மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகிலேயே கொவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

உலகில் பதிவாகி இருக்கும் மொத்த கொவிட்-19 சம்பவங்களில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியதாகும்.

அதோடு, உலகின் மொத்த மரண எண்ணிக்கையில், 20 விழுக்காடு மரணங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இதனிடையே, அந்நாட்டில் கொவிட்-19 நோய்ப் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதோடு சுமார் 80 லட்சம் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்களின் மொத்த தொகையில் 16 விழுக்காட்டினர் அதாவது 5 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் வாழ்வதாகக் கொளும்பியா பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் சமூக கொள்கை மையம் தெரிவித்தது.

-- பெர்னாமா