உலகம்

குறைந்த வருமானமுள்ள நாடுளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்காதது, நெறி தவறும் செயல், WHO கண்டனம்

19/01/2021 08:20 PM

சுவிட்சிலாந்து, 19 ஜனவரி (பெர்னாமா) -- வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு அதிக சலுகை இருப்பதால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்காமல் இருப்பது நெறி தவறும் செயல் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், 49 உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு மூன்று கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கும் வேளையில், குறைந்த வருமானம் கொண்ட ஒரு நாட்டிற்கு 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் செயல், உலகம் நெறி தவறும் விளிம்பில் இருப்பதை புலப்படுத்துவதாகவும் அவர் சாடியிருக்கிறார்.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் திட அளவு, விலை மற்றும் விநியோக தேதிகள் உட்பட COVAX தடுப்பூசி ஒப்பந்தங்களில் வெளிப்படையாக இருப்பதுடன், அதற்கு முன்னுரிமை வழங்கி விநியோகிக்க வேண்டும் தெட்ரோஸ் கேட்டு கொண்டார்.

COVAX தடுப்பூசி WHO தலைமையிலான உலகளாவிய அளவில் முதல் முயற்சி என்பதால், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து, இத்தடுப்பூசிகள் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை அது உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

அதோடு, இன்னும் 100 நாட்களில் அனைத்து நாடுகளிலும் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

''என்னை உட்பட நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்தியதோடு, இது சுய தோல்வியாகும். இறுதியில், இந்த செயல்கள் தொற்றுநோயை நீட்டிக்கும், நம் வலியை நீட்டிக்கும். அதைக் கட்டுப்படுத்த மனிதர்கள் மற்றும் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்கும்'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த உலகம் போராடி வரும் வேளையில், சில நாடுகளில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

--பெர்னாமா