உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

18/01/2021 03:59 PM

வாஷிங்டன் டி.சி, 18 ஜனவரி (பெர்னாமா) - எதிர்வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

அவரின் பதவியேற்பு விழாவின்போது நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஷாண்டோங், சீனா

கிழக்குச் சீனா, ஷாண்டோங் மாகாணத்தின் கிசியா பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின்போது நிலத்தடியில் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இவ்விபத்தில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட வேளையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

ஜகார்த்தா, இந்தோனேசியா

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

இந்நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சா பாலோ, பிரேசில்

உலக அளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக உயிரிழப்பைப் பிரேசில் சந்தித்துள்ள வேளையில் அந்நோய்க் காரணமாக இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 54 வயதுடைய மொனிக்கா கலசன்ஸ் எனும் தாதியர் பிரேசிலின் முதல் நபராகச் சீனத் மருந்து நிறுவனம் தயாரித்த சினொவாக்  தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா