பொது

பிகேபி: எஸ்ஓபி-யை மீறியதால் நேற்று 608 பேர் கைது

17/01/2021 07:38 PM

புத்ராஜெயா, 17 ஜனவரி (பெர்னாமா) -- நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபி-யின் செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யை மீறியக் குற்றதிற்காக, நேற்று சனிக்கிழமை 608 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 580 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், 27 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ஒருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

சுவாசக் கவசம் அணியாதது, வாடிக்கையாளர்களுக்கு சுய விவரக் குறிப்பு உபகரணங்களைத் தயார் செய்து வைக்காதது ஆகிய குற்றங்களின் அடிப்படையிலேயே அதிகமான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அனுமதியின்றி மாநிலம் கடந்து செல்ல முயற்சித்தது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக வணிகத் தளங்கள் செயல்பட்டது, தொடுகை இடைவெளியைப் பின்பற்றாதது, இரவு மனமகிழ் நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுடன், இதர குற்றங்களுக்காகவும் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்.

ஓப் பெந்தேங் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

-- பெர்னாமா