விளையாட்டு

பி.கே.பி. நீட்டிக்கப்பட்டால் உள்நாட்டு காற்பந்து போட்டிகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும்

15/01/2021 07:41 PM

கோலாலம்பூர், 15 ஜனவரி (பெர்னாமா) -- ஜனவரி 26-ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி. நீட்டிக்கப்பட்டால், உள்நாட்டு காற்பந்து போட்டிகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என்று மலேசிய காற்பந்து சங்கம் தெரிவித்திருக்கிறது.

மேலும், ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்படவிருந்த மலேசிய லீக் கிண்ணம் நடைபெறாது என்று, அச்சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி கோடிகாட்டியிருக்கிறார்.

பி.கே.பி. காலக்கட்டத்தில், பயிற்சிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஜனவரி 26-ஆம் தேதிக்குப் பிறகு, உடனடியாக போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கவிருந்த மலேசிய லீக் கிண்ணம், நாட்டில் அமல்படுத்தப்பட்ட பி.கே.பி.-யினால், ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பருவத்தில், செப்பாங் பந்தைய தளத்தில், நடைபெறத் திட்டமிருந்த 'MOTOGP' எனும் மோட்டார் பந்தைய போட்டி நடத்த முடியுமா என்பதைக் கொவிட்19 தொற்றுநோயின் தற்போதைய நிலைமையே தீர்மானிக்கும்.

இது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், குறைந்தபட்சம் இவ்வாண்டு செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடயே, இன்று அதிகாலை நடபெற்ற இங்லீஷ் பிரிமிய லீக் கிண்ண ஆட்டத்தில் ஆர்சனல் 0-0 என்ற நிலையில், கிரிஸ்டல் பெலஸ்சிடம் சமநிலை கண்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், வெஷ் ஹம் அணி, பெர்ன்லியுடன் களம் காணும் வேளையில், பிரிங்டன் அணி, லீட்ஸ் யூனைட்டைச் சந்திக்கவுள்ளது.

-- பெர்னாமா