பொது

பொலிவிழந்து காணப்படும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா

14/01/2021 05:49 PM

கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது களைக்கட்டி இருக்கும் கோலாலம்பூர், லிட்டல் இந்தியா என்றழைக்கக் கூடிய பிரிக்பீல்ட்ஸ் இன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பி.கே.பி. அமலாக்கத்தினால் களை இழந்திருக்கிறது.

அப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில் இருந்ததைப் பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.

ஆயினும் அங்குப் பொங்கல் பானை உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்கக் காணப்பட்டன.

ஆண்டுதோறும் ப்ரிக்பீல்ட்ஸ்சில் உள்ள பெரும்பாலான கடைகளின் வளாகத்தில் பொங்கலிட்டு மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும்.

இன்று அச்சூழலுக்கு முற்றிலும் முரணாகச் சில அத்தியாவசிய கடைகளின் வளாகத்தில் முன் குறைந்த எண்ணிக்கையிலானோருடன் பொங்கலிடப்படுவதைக் காண முடிந்தது.

அதனைத் தவிர்த்து அச்சுற்று வட்டாரத்தில் மேலும் சிலர் தங்களின் குடும்பத்தாருடன் வீட்டிலேயே நிபந்தனையுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடியதையும் காண முடிந்தது.

இந்நிலையில் கோலாலம்பூர், தாமான் ஶ்ரீ சிகாம்புட்டில் வசிக்கும் முத்துகுமார் ராஜூ உறவினர்களின் வருகையின்றி தமது குடும்பத்தாரோடு மிதமான அளவில் பொங்கல் திருநாளை வரவேற்றிருக்கிறார்.

பாரம்பரிய முறைபடியும் கலாச்சாரம் மாறாமலும் கொண்டாடப்பட்ட இப்பொங்கலின்போது அரசாங்கம் நிர்ணயித்த செயல்பாட்டுத் தர விதிமுறையை முறையே பின்பற்றியதுடன் அனைவரும் சுவாசக் கவசம் அணிந்திருந்ததாக முத்துகுமார் ராஜூ தெரிவித்தார்.

அரை மணி நேரத்தில் பால் பொங்கி வந்தபோது அங்கிருந்த அனைவரும் பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.

-- பெர்னாமா