சிறப்புச் செய்தி

பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டும் மக்கள்

13/01/2021 08:10 PM

ஜார்ஜ்டவுன், 13 ஜனவரி (பெர்னாமா) -- நாளை கொண்டாடப்படவிருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பினாங்கு லெபோ பெசாரில் அதற்கான பொருட்களை வாங்குவதில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இவ்வாண்டு பொங்கல் மிதமான அளவில் கொண்டாடப்பட்டாலும் அதனை பண்பாடு மாறாமல் முறையாக செய்வதில் மக்கள் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடிப்பது வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

நாளை பிறக்கும் பொங்கலுக்கு தேவையான கரும்பு, பால், பானை, மஞ்சள் கொத்து போன்றவற்றை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வமாக இருந்தனர்.

இம்முறை அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றி தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் மிதமான அளவில் இந்தப் பொங்கலை கொண்டாடவிருப்பதாக லெபோ பெசாரில் வசிக்கும் ஜி.கோகிலாதேவி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

''இந்த ஆண்டு பொங்கல் சற்று வித்தியாசமாக உள்ளது. சுவாசக் கவசம் அணிந்து கொண்டு பொங்கல் கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

மீண்டும் பி.கே.பிஅமல்படுத்தப்பட்டிருப்பதால், கரும்பு விற்பனை வியாபாரம் இம்முறை குறைந்த சற்று மந்தமாக இருப்பதாகவும் வியாபாரி எஸ்.குமரகுரு தெரிவித்தார்.

''கடந்த ஆண்டு 500 ஜோடி கரும்புகளை விற்பனை செய்தேன். இந்த ஆண்டு 200 ஜோடி மட்டுமே விற்பனைக்கு எடுத்துள்ளேன். ஏனென்றால், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது,'' என்றார் அவர்.

பொங்கல் பொருட்களை வாங்க வரும் மக்கள் கிருமி நாசினி திரவங்களை பயன்படுத்துவதுடன், சுவாசக் கவசம் அணிந்து கட்டுப்பாடோடு பொருட்கள் வாங்குவதை காண முடிந்தது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப மக்கள் சந்தித்து வரும் கொவிட்-19 பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றனர்.

--பெர்னாமா