அரசியல்

ஆர்.ஓ.எஸ். : பெஜுவாங் கட்சியின் விண்ணப்பம் நிராகரிப்பு

07/01/2021 07:40 PM

கோலாலம்பூர், 07 ஜனவரி (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பெஜுவாங் கட்சியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விண்ணப்பத்தைச் சங்கங்களின் பதிவு இலாகா ஆர்.ஓ.எஸ். நிராகரித்துள்ளது.

அதன் பதிவு முறையற்றுச் செய்யப்பட்டது என்ற அடிப்படையில் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக நேற்று மாலை 5.50 மணியளவில் அக்கட்சியின் செயலாளர், டத்தோ அமிருடின் ஹம்சாவிற்கு, ஆர்.ஓ.எஸ். கடிதம் ஒன்றை அனுப்பியதாகப் பெஜுவாங் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைடீர் சுஹைமி தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதிவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காத ஆர்.ஓ.எஸ்.-சின் நடவடிக்கையை எதிர்த்துப் பெஜுவாங் கட்சி செய்த விண்ணப்பத்திற்கான நீதிமன்ற மறுஆய்வு அனுமதியின் செவிமடுப்பு நாளாக இன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆர்.ஓ.எஸ்.-சின் அம்முடிவைத் தொடர்ந்து பெஜுவாங் முன்னதாகச் செய்திருந்த நீதிமன்ற மறுஆய்வு அனுமதியின் விண்ணப்பத்தை மீட்டுக் கொண்டிருப்பதாக மியோர் நோர் ஹைடீர் கூறினார்.

இதனிடையே, மூடா கட்சியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவதற்கான விண்ணப்பத்தை ஆர்.ஓ.எஸ். நேற்று நிராகரித்திருப்பதை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், ஷெட் சட்டிக் ஷெட் அப்துல் ரஹ்மானின் இன்று ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்திருக்கிறார்.

-- பெர்னாமா