பொது

சட்டவிரோதக் குடியேறிகளின் மறு-அளவிடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள்

04/12/2020 07:01 PM

புத்ராஜெயா, 04 டிசம்பர் (பெர்னாமா) -- திரும்ப அனுப்புவதற்கான மறு-அளவிடு திட்டம் மற்றும் ஆள்-பல மறு-அளவிடு திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும், சட்டவிரோதக் குடியேறிகளின் மறு-அளவிடு திட்டத்திற்கு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று குடிநுழைவுத்துறை எதிர்ப்பார்க்கிறது.

நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட அத்திட்டத்தில், கடந்த புதன்கிழமை வரையில், 1,980 சட்டவிரோதக் குடியேறிகளுக்காக, முதலாளிகள் செய்த 478 விண்ணப்பங்களைத் தமது துறை பெற்றிருப்பதாக, குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், டத்தோ கைருல் ஜைமி டாவுட் தெரிவித்திருக்கிறார்.

அந்த விண்ணப்பங்கள் யாவும், மின்னஞ்சல் வழியாக தமது தரப்பிற்கு கிடைத்ததாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கைருல் ஜைமி கூறியிருக்கிறார்.

இருப்பினும், கடந்த புதன்கிழமை தொடங்கி, முதலாளிகள் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில், இயங்கலை வாயிலாக தங்களின் விண்ணப்பத்தைச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் ஆள்பலத் துறையின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோதக் குடியேறிகளின் மறுஅளவிடு திட்டம் அமல்படுத்தப்படுவதையும் கைருல் ஜைமி தெரிவித்தார்.

''தரகர்கள் யாரும் இருந்தால், அதாவது எந்தவொரு தரப்பினரோ அல்லது முதலாளிகளை சந்தித்து, குடிநுழைவுத்துறை அல்லது ஆள்பலத் துறையால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினால், அது பொய்யான தகவல் ஆகும். ஏனென்றால், இத்திட்டத்தை குடிநுழைவுத் துறை மற்றும் ஆளபலத் துறையுடன் இணைந்து, இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவுச் செய்திருக்கிறது,'' என்று டத்தோ கைருல் ஜைமி டாவுட் கூறினார்.

திரும்ப அனுப்புவதற்கான மறுஅளவிடு திட்டம், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தானாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கும் வேளையில், ஆள்பல மறுஅளவிடு திட்டம், சட்டவிரோதக் குடியேறிகளை சட்டபூர்வமான அந்நிய தொழிலாளர்களாக மாற்றும் நடவடிக்கையாகும்.

தொழிற்துறை, கட்டுமானம், விவசாயம் மற்றும் தோட்ட தொழிற்துறையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்களுக்கு மட்டுமே ஆள்பல மறுஅளவிடு திட்டம் வேலை வாய்ப்பை வழங்கும்,

அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி வழங்கியிருக்கும் 15 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

-- பெர்னமா